தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்பாட்டு கலைகளில் சிலம்பமும் ஒன்றாகும் வீர விளையாட்டின் தாய் கலையாகவும் சிலம்பம் கலை திகழ்கிறது. இத்தகைய பாரம்பரிய கலையானது இன்றைய சந்ததியோடு மறைந்து விடக்கூடாது என்பதை கொண்டு எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் மதுரையை சேர்ந்த சிலம்பம் ஆசான் டாக்டர் ரா சரவண பாண்டி
மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள இந்திய சிலம்பம் அறக்கட்டளையின் மூலம் தாய் தந்தையற்றவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவசமாக சிலம்பம் கலையை கற்றுக் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் இந்திய சிலம்பம் அறக்கட்டளையின் தலைமையில் ஸ்டார் புக் ஆப் ரெக்கார்டும் இணைந்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கண்களைக் கட்டிக் கொண்டு ஒரு மணி நேரம் இடைவிடாமல் தொடர்ந்து சிலம்பம் சுற்றும் உலக சாதனை முயற்சி நடைபெற்றது.
இந்த உலக சாதனை முயற்சியில் ஜீவனா பள்ளியில் பயிலும் ஆதித் என்ற 4 வயது சிறுவன் ஒரு மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி உலக சாதனை புரிந்தார். மதுரை எஸ்.எஸ் காலனியை சேர்ந்த நாகேந்திரகுமார் வனிதாசங்கரி தம்பதியினரின் மகனான ஆதித் கடந்த ஆறு மாதமாக இந்திய சிலம்பம் அறக்கட்டளை நிறுவனரான சிலம்பம் ஆசான் டாக்டர் ரா சரவணபாண்டி அவர்களிடம் பயிற்சி பயின்று வருகிறார்.
உலக சாதனை புரிந்து இந்திய சிலம்பம் அறக்கட்டளைக்கும் தனது பெற்றோர்களுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்…
நான்கு வயது சிறுவனுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்த சிலம்பம் ஆசான் டாக்டர் ரா.சரவணபாண்டியை மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்