ஆஸ்திரேலியாவை வென்ற கையோடு நியூசிலாந்துக்கு பிளைட் பிடித்த இந்திய அணி, நாளை முதல் டி20 போட்டியில் விளையாடவுள்ளது. இந்த நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் குறுகிய கால இடைவெளியில் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் நடத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, ” இந்தியாவை விட 7 மணி நேரம் முன்னதாக நேர வித்தியாசம் உள்ள ஒரு இடத்துக்கு மாறுவது கொஞ்சம் கஷ்டம் தான். வருங்காலத்தில் பிசிசிஐ இதை கருத்தில் கொள்ளும் என நினைக்கிறேன். இந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் ஒவ்வொரு டி20 போட்டியும் முக்கியமாக உள்ளது,” என்றார்.
ஆனால் கோலியின் இந்த பேச்சுக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.ஏ.என்.எஸ் நிறுவனத்துக்கு பிசிசிஐ அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், ” தன்னுடைய கருத்தை சொல்ல கோலிக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால் வீரர்களின் நலனை கருத்தில் கொண்டே பிசிசிஐ பயணத்திட்டங்களை தீட்டி இருக்கிறது. தீபாவளி தினத்தில் அனைத்து வீரர்களும் ஓய்வில் தான் இருந்தனர்.
தற்போதைய பயண அட்டவணை கிரிக்கெட் நிர்வாக குழுவினர் இருக்கும் போது திட்டமிடப்பட்டது. இதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று தெரியவில்லை? ஒருவேளை கோலிக்கு இதில் அதிருப்தி ஏதும் இருந்திருந்தால் அவர் அப்போதே இதுகுறித்து தெரிவித்து இருக்கலாம்,” என பதிலளித்து இருக்கிறார்.