பாஜக, ஆர்எஸ்எஸ்ஸின் நிறுவனங்களைப்போல் சிபிஐ, அமலாக்கத் துறை செயல்பட்டு வருகின்றன என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை கடந்த ஜன.14 ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கினார். 15 மாநிலங்கள் மற்றும் 6700 கி.மீ. தூரத்திற்கு பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்த நீதிப் பயணம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த பயணத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர். அவரின் இந்த நீதிப் பயணம் நேற்று (மார்ச்.15) மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நிதியில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய இத்திட்டத்தை அறிமுகம் செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஆனால், இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டி பாஜகவுக்கு நன்கொடை வழங்க வைக்கவே இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு நன்கொடை வழங்காத கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகள் ஏவப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அதன்பிறகு அந்நிறுவனங்கள் பாஜகவுக்கு நன்கொடை அளித்துவிட்டால் வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படுகின்றன.
இத்திட்டத்தின் மூலம் பெற்ற நிதியை சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைப் பிரிக்கவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசை சீர்குலைக்கவும் மத்திய பாஜக அரசு பயன்படுத்துகிறது.
பாஜக, ஆர்எஸ்எஸ்ஸின் நிறுவனங்களைப் போல் சிபிஐ, அமலாக்கத் துறை செயல்பட்டு வருகின்றன. பாஜக அரசு அகற்றப்பட்டு இதுவரை நிகழ்த்தப்பட்ட தவறுகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதே என்னுடைய உத்தரவாதமாகும்.’
இவ்வாறு அவர் தெரிவித்தார்.