டெல்லி: எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வரும் Click Here டிரெண்டிங் என்றால் என்ன?. நடப்பு நாடாளுமன்ற தேர்தலுக்கும் அதற்கும் என்ன தொடர்பு?
என்பதை பாப்போம். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ஏதாவது ஒரு சுவாரசியமான கருத்து அல்லது நகைச்சுவை துணுக்கு டிரெண்டாவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில நாட்களாக எக்ஸ் வலைதளத்தில் இளைய தலைமுறையினரால் டிரெண்ட் செய்யப்படுவது தான் Click Here அதாவது எக்ஸ் வலைத்தளத்தில் Click Here என்றும், இடது கீழ்புறத்தை குறிக்கும் ஒரு அம்பு குறியும் போடப்பட்ட ஒரு புகைப்படம் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இதன் நிஜ பெயர் Alt பட்டன் என்றும் பார்வை மாற்றுத்திறனாளிகளும் எக்ஸ் தளத்தை சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் செய்திகளை ஒளி வடிவத்திற்கு மாற்றி கொள்ளும் வசதி தான் இது என்றும் எக்ஸ் வலைத்தள நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த வசதியானது கடந்த 2016ம் ஆண்டே நடைமுறைக்கு வந்துவிட்டாலும் அவ்வப்போதைய அனுபவங்களின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டு தற்போது Alt பட்டன் மூலம் 420 எழுத்துக்கள் வரை பதிவு செய்ய இயலும். தற்போது இந்தியாவில் மக்களவை தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் இந்த Click Here டிரெண்டையும் தங்களுக்கு சாதகமாக மாற்றி கொண்டுள்ளன முக்கிய அரசியல் கட்சிகள்.
இந்த டிரெண்டில் முதலில் இணைந்த பாரதிய ஜனதா கட்சி, ஒரு Click Here படத்தை பகிர்ந்து அதன் Alt பட்டனில் மீண்டும் மோடி அரசு என குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து பாஜக-வை தேர்தல் களத்தில் எதிர்கொள்வதை போலவே எக்ஸ் களத்திலும் எதிர்கொண்டது காங்கிரஸ். உடனடியாக ஒரு Click Here படத்தை பகிர்ந்த காங்கிரஸ் அதன் Alt பட்டனில் நரேந்திர மோடி மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலை வழிநடத்துகிறார். அது உங்களுக்கே தெரியும்! என்று குறிப்பிட்டிருந்தது.
நாடு முழுவதும் காங்கிரசின் இந்த Click Here படம் பரவலாக பகிரப்பட, ஆம் ஆத்மி கட்சியும் இந்த டிரெண்டிங்கில் இணைந்தது. நேற்றைய தினம் இந்தியா கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்ட வேலையில் இருந்த அக்கட்சி பகிர்ந்த Click Here Alt பட்டனில் நாட்டை காப்பாற்ற மார்ச் 31 அன்று ராம்லீலா மைதானத்திற்கு வாருங்கள் என்று குறிப்பிட்டது. திரை பிரபலங்கள், செய்தி ஊடகங்கள், மீம் கிரியேட்டர்கள் போன்றவர்களையும் இந்த Click Here டிரெண்ட் விட்டுவைக்க வில்லை. இந்த டிரெண்ட் போகும் வேகத்தை பார்த்தால் இதன் சுவாரசியம் இப்போதைக்கு தீராது போல் இருக்கிறது.