
ED,IT,CBI உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிய பாசிச பா.ஜ.க மிரட்டி வருகிறது.
மேலும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான எதிர்க்கட்சி தலைவர்களை பா.ஜ.கவில் இணையவைப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
பா.ஜ.கவில் இணைந்துவிட்டால் அவர்களது ஊழல் வழக்குகள் காணாமல் போய்விடுகிறது. அப்படி இல்லை என்றால் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு.
இந்நிலையில் 10 ஆண்டுகால மோடி ஆட்சியில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேர் பா.ஜ.க.,வில் சேர்ந்துள்ளனர் என்று “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இக்கட்டுரையை சுட்டிக்காட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள சமூகவலைத்தளப் பதிவில், சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு, அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவது அம்பலமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்கள், பா.ஜ.க.வில் இணைந்தால் மோடி வாஷிங்மெஷின் மூலம் தூய்மையாகின்றனர் என்று சாடியுள்ள அவர், 2014 ஆம் ஆண்டு முதல் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 25 தலைவர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் பா.ஜ.க. வில் இணைந்ததும் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டது அம்பலமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணி யின் செயல், ஜனநாயகத்திற்கு சாபமாக மாறியுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான விசாரணை அமைப்புகளின் வழக்குகள் குறித்த புலனாய்வு அறிக்கையை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பா.ஜ.க.வுடன் சேர்ந்ததால் ஆதாயமடைந்த 25 பேரில் அஜித் பவார், பிரஃபுல் படேல் உள்ளிட்ட 12 பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள், பா.ஜ.க.வில் இணைந்தால் மோடி வாஷின்மெஷின் மூலம் சுத்தப்படுத்தப்படுகிறார்கள் என்பது இதன்மூலம் தெரிய வருவதாக கார்கே குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்