Wednesday , July 30 2025
Breaking News
Home / வட மாவட்டங்கள் / கள்ளக்குறிச்சி / மலரும் நினைவுகள் கள்ளக்குறிச்சி…
NKBB Technologies

மலரும் நினைவுகள் கள்ளக்குறிச்சி…

மலரும் நினைவுகள் கள்ளக்குறிச்சி :

1. பெருமை மிகுந்த பெருமாள் கோவில், சிறப்புடைய சிவன் கோவில், அடுத்தடுத்து அமைந்த அருமையான ஊர் -நமது கள்ளக்குறிச்சி.

2. அழகான இரு அக்ரகார தெருக்கள். அதில் அரையணா விற்கு அருமையான இட்லி – சட்னி வழங்கிய ஐய்யர் கடை,இன்னும் மனதை விட்டு மறையாதது.

3. என்ன தவம் செய்தனர், கல்லை பெருமாள் கோவில் தெருவில் பிறந்தவர்கள், நினைவு தெரிந்து 1960 முதல் ஆழி மலர் கண்ணனை துயிலெழுப்ப M.S.S. குரலில் அமுத கானமாய் மிதந்த திருப்பாவை கேட்டு மகிழ்ந்த வர்களில் அடியேனும் ஒருவன்.

4. இறையன்பு உடைய இளையாழ்வார் – தியேட்டர் ஸ்ரீதரனின் உரிமையாளர், படம் ஆரம்பித்தவுடன் திரையில் பெருமாளை வணங்கி வரவேற்றது பார்ப்பவரை பரவசப்படுத்தும் .

5. யாருக்கும் தலைவணங்காத கள்ளக்குறிச்சியின் பெரும் தனவந்தர் ராஜகோபால் செட்டியார், 1960 -தற்கு முன்பு நிறுவியது ராஜா தியேட்டர் .

6. ஸ்ரீ தரணிலும், ராஜா விலும், தினம் தினம் சினிமா பார்த்த ரசிகர் கூட்டம் சிரித்து மகிழ்ந்தது அந்தக்காலம்.

7. தாயின் மணிக்கொடி பாரீர், அது தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் – என மாணவர்கள் பாட மணிக்கூண்டு தெரு பள்ளியில் – 1961-ல் , தலைமையாசிரியர் கொடியேற்றி ஆரஞ்சு மிட்டாய் அள்ளிக் கொடுத்ததை மறக்க முடியுமா .

8. 1960 க்கு முன்பு கரண்ட் இல்லா காலங்களில், தெருக்களில் கல்தூணில் திருவிளக்கு ஏற்றி காற்றில் அணையாத கண்ணாடி விளக்குகள் பொருத்தி ஒளி வழங்குவார்கள். அது இப்போதும் நினைவில் உள்ளது.

9. 1968- 69 களில் மக்கள் திலகத்தை ,அரிய பெருமானூர் ஏரியில் திரண்டு இருந்து கண்டு மகிழ்ந்ததையும்,
ஏமப் பேரில் தேன்கூடு நாடகத்தில் நடிகர் திலகத்தை பார்த்துப் பரவசப்பட்டதையும் இன்றும் மக்கள் மறக்காமல் உள்ளனர்.

10. சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்ஷா படத்திற்கு, ராஜா தியேட்டருக்கு முதல் காட்சிக்கு 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் சாரை சாரையாக பவனி வந்து கள்ளக்குறிச்சி மக்களை மகிழ்வித்தது இன்றும் மறக்க முடியாத நிகழ்ச்சி.

11. உள்ளூர் பஞ்சாயத்தில் அந்த காலத்தில் ஒவ்வொரு நாளும் விடியற்காலை 5 மணி, 8 மணி, மதியம் 1 மணி ,
இரவு 8 மணி ,மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்கும், ஜனவரி 30 அன்று மகாத்மா காந்தியடிகளின் நினைவாக பகல் 11 மணிக்கு சங்கொலி எழுப்பியதை 50 வயதிற்கு மேற்பட்ட கள்ளக்குறிச்சி வாழ் மக்கள் நன்கு அறிவர்.

12. தற்போது உள்ள அரசாங்க பெண் பாடசாலையின் பின்புறம் கள்ளக்குறிச்சிக்கு அழகு சேர்த்த பெரிய குளம் ஒன்று இருந்தது. அதுவும் அதன் அருகிலிருந்த நந்தவனத்தின் கிணறும் ஊர்மக்களின் தாகத்தை தணித்தது. அப்பொழுது இருந்த அனைவரும் நன்கு அறிவர்.

13. தற்போது மேலே சொன்ன அவ்விடங்களில் அளவிற் பெரிய காய்கறி மார்க்கெட்டும், மளிகை கடைகளும், மக்களின் தேவையை பூர்த்தி செய்வதை இப்போது உள்ளவர் அறிவர்.

14. காஞ்சி மகாபெரியவர் அவர்கள் 1965 -70 காலக்கட்டங்களில் ,பல்லக்கு, ஒட்டகம், யானை, அடியவர்கள் ,உட்பட கள்ளக்குறிச்சிக்கு வருகைதந்து, இப்பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்றதை கண்டவர்கள் பாக்கியசாலிகள்.

15. திருக்கோவிலூர் ஜீயர் அவர்கள், கல்லை நகரத்திற்கு அடிக்கடி வருகைதந்து எம்பெருமானை வழிபட்டு நமக்கெல்லாம் ஆசி வழங்கியதை கள்ளக்குறிச்சியில் உள்ள வைணவர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.

16. சிறிய கட்டிடத்தில் ஆரம்பித்து பெரிய கல்வி நிறுவனமாக வளர்ந்து மாணவச் செல்வங்களை உருவாக்கிய பாரதி கல்வி நிறுவனத்தின் லட்சுமி கந்தசாமி அவர்களை யாராவது மறக்க முடியுமா ..

17. 20 மாணவர்களுடன் ஆரம்பித்த ஆர் கே எஸ் கல்லூரி இன்று 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை பட்டதாரிகளாக ஆக்கி அவர்கள் பெற்றோர்களை பெருமை கொள்ளச் செய்ததை பாராட்டாமல் இருக்க முடியுமா ..

18. கொடை வள்ளல்
ஏ கே டி யின் புகழை வானுயர எடுத்துச் சென்று தந்தைக்குப் பெருமை சேர்த்து தன்னிகரற்று எண்ணற்ற கல்வியாளர்களை உருவாக்கி கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வியில் முன்னேறிய மாவட்டமாக விளங்கிட செய்திடும் இந்நகரின் சிறந்த மனிதர் திரு ஏ கே டி மகேந்திரன் அவர்களால் இந்த கள்ளக்குறிச்சி கே மிகுந்த பெருமை என்பதை இப்போதுள்ள நாம் எல்லோரும் அறிவோம்.

19. தமிழுக்கு சேவை செய்யும் ஆசுகவி ஆராவமுதன் ஐயா அவர்களால் இக் கள்ளக்குறிச்சிக்கு பெருமை.

20. அருமையான ஆசிரியர்கள் பலரிடம் கல்வி கற்றது நம் கள்ளக்குறிச்சி மாணவர்கள் அனைவருக்கும் பெருமை.
அறிவு அன்பு அடக்கம் ஆற்றல் மிகுந்த S.N. என்ற திரு நாராயணசாமி , திரு சேஷ ஐயா, திரு சேவா, திரு மகபூப் காண், திரு சிவராமன், திரு பெரியசாமி, திரு நடுசாமி, திரு முத்துசாமி, திரு மணவாளன், திரு ஜெயராஜ், திரு சீனிவாசன் இவர்களால் முன்னேறியவர்கள் தான் இங்கு உள்ள அனைவரும்.

21. வடமாநிலத்தில் தற்போது உள்ளது போன்று
1980ம் வருடம் வரை குதிரை வண்டிகளும் மாட்டு வண்டிகளும் ரிக்ஷாக்களும், இப்போது உள்ள ஆட்டோக்களுக்கு முன் உதாரணமாகும்.

22. சென்னை சென்று கள்ளக்குறிச்சிக்கு பெருமை சேர்த்தவர்கள் உடையார் என்று அழைக்கப்படும் ராமசாமி உடையாரும், ஊக்கமதை கைவிடாமல் பொறுமையாக இருந்து படிப்படியாக முன்னேறி பலரும் பாராட்டும் மிகப்பெரிய சினிமா டைரக்டராக வளம் வரும் திரு ஏ ஆர் முருகதாஸ் என்றால் அது புகழ்வதற்காக சொல்வது அல்ல.

23. தண்ணீர் வறண்ட காலங்களில் 1980 இல் இருந்து 90 வரை கள்ளக்குறிச்சியில் உள்ள மக்கள் அனைவருக்கும் இலவசமாக தண்ணீர் வழங்கி பெரும் செல்வந்தராக இருந்து தர்மம் செய்து வள்ளலாக வாழ்கின்ற திரு கோவிந்த உடையாரும் கள்ளக்குறிச்சியின் வாழும் தியாகி ஆவார்.

24. டாக்டர் கோவிந்தராஜன் ,டாக்டர் மேனன், ஒரு ரூபாய்க்கு வைத்தியம் பார்த்த ஐயர் டாக்டர் கண்ணன், வழக்கறிஞர்கள் திரு கே ஆர் நடராஜன், திரு டி கே இலட்சுமி குமார் ,திரு சாமிதுரை சம்பத் அவர்கள், மக்களுக்கு ஆற்றிய பணியை நம் ஒருவராலும் மறக்க இயலாது.

25. ஒரு காலத்தில் கள்ளக்குறிச்சி தண்ணீர் இல்லாத நகரம். தற்பொழுது கல்லை மாநகர் தன்னிறைவு பெற்ற நகரம்.

– இப்படிக்கு
டி கே ரங்கராஜன்
வழக்கறிஞர் /நோட்டரி பப்ளிக்
ராஜா நகர்
கள்ளக்குறிச்சி.
Mob : 9442624742.

Bala Trust

About Admin

Check Also

தெரு நாய் கடிகளால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த தேசிய செயல் திட்டம் வகுக்க வேண்டும்…

உலகில் ரேபிஸ் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இதை தடுக்க மத்திய மாநில அரசு கால்நடை மருத்துவத்துறையின் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES