கள்ளர் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் செயலுக்கு அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநிலத் தலைவர் ஆபேல்மூர்த்தி எதிர்ப்பு தெரிவித்து பேசினார்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி மற்றும்
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன் மற்றும் வட்டாட்சியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அனைத்து விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில்,
கள்ளர் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகளின் பெயர்களை நீக்கி பள்ளிக்கல்வி துறையோடு இணைக்க கூடாது.
ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த சட்டத்தை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். அந்த சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆங்கிலேயர்கள் கட்டிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட பல்வேறு கட்டிடத்தை பயன்படுத்தும் நாம் அவர்களின் சட்டத்தை நீக்குவதற்கு முயற்சி எடுப்பது மிகவும் கண்டனத்திற்கு உரியது. கள்ளர் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைத்தால் மாணவர்களுக்கான சலுகைகள் பறிக்கப்பட்டு அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும். மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் முதல்வரிடம் வழங்கிய அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் வரும்போது திருநீறு கயிறு உள்ளிட்ட மத அடையாளங்களை மாணவர்கள் அணியக்கூடாது என்ற அறிக்கையை செயல்படுத்த கூடாது.
அவரவர்கள் மத அடையாளங்களை வெளிப்படுத்துவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. எனவே மாணவர்கள் எப்போதும் போல் கயிறு,திருநீறு அணிந்து வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். என பேசினார்.
இந்நிகழ்வில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தின் செக்கானூரணி பகுதி தலைவர் செல்லப்பாண்டி மற்றும் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.