மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுவது குறித்து-வேண்டுகோள் கடிதம்:
மதிப்பும் மரியாதையும் மிக்க தமிழக முதல்வர் திரு கே எடப்பாடி பழனிச்சாமி ஐயா அவர்களுக்கு தற்சமயம் கொரோனா பேரிடர் காலத்தில் மதுபான கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டு 40 நாட்களை கடந்து விட்டது. இந்த தருணத்தில் மது போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மீண்டு வருவதற்கு இது ஒரு நல்ல தருணமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் மது கிடைக்காமல் ஆங்காங்கே ஒரு சிலர் சிறு சிறு மாற்று வழிகளையும் எடுத்து வருகின்றனர். இருப்பினும், தமிழகம் முழுவதும் மது அருந்துபவரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. தற்சமயம் வெறும் 10 சதவீதம் மட்டுமே மதுவிற்கு தீவிர அடிமையாகி உள்ளனர். இவர்களுக்கு முறையாக மருத்துவ கவுன்சில் அளிப்பதன் மூலமாக அவர்களையும் நல்லமுறையில் மீட்டெடுக்க முடியும். இந்தப் பேரிடர் காலத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும் பொருட்டு பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து தாங்கள் ஓர் நல்ல ஒரு முடிவை எடுக்கும் பட்சத்தில் இந்த மக்கள் மிகுந்த மன நிம்மதியும் வாழ்வாதாரம் வளர்ச்சியும் அடையக்கூடும். மேலும் தமிழக அரசின் மொத்த வருவாயில் கிட்டத்தட்ட 45 சதவீத வருமானம் இந்த மதுபான கடைகளின் மூலமே கிடைக்கிறது. இதனை வேறு மாற்று வழிகள் எவ்வாறு ஈட்டலாம் என்று கலந்து ஆலோசித்து அந்த வருமானத்தை பெருக்கவும் இந்த மதுபான கடையை மூடுவதற்கும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக வருமானத்தை பெருக்குவதற்கு எங்களிடம் சில வழிமுறைகள் உள்ளன. தாங்கள் இது சம்பந்தமாக விவாதிக்க விரும்பினால் நாங்கள் உங்களை சந்தித்து அந்த வழிமுறைகளை தங்களிடம் கொடுப்பதற்கும் தயாராகவே உள்ளோம். தமிழக மக்களுக்கு விடிவு காலம் கிடைக்கும் பொருட்டு ஒரு நல்லதொரு முடிவை எடுப்பீர்கள் என தமிழக மக்களும் தமிழ்நாடு இளைஞர் கட்சியும் உங்கள் ஊர் நல்லதோர் முடிவை எதிர்நோக்கி காத்திருக்கின்றோம்.எனவும்
மதுவில்லா பாரதம் படைப்போம்! மக்களின் வாழ்வாதாரம் காப்போம்!!எனவும்
தமிழ்நாடு இளைஞர் கட்சி
பொதுச்செயலாளர்.
டாக்டர்.ராஜசேகர் அவர்கள் கோரிக்கையாகவும் அறிக்கையாகவும் வெளியிட்டார்.