இந்திய நிறுவனங்களுக்கு புதிய முதலீட்டு சந்தையாக மாறியிருக்கிறது இலங்கை, ஆட்டோமொபைல் முதல் உணவு பொருட்கள் வரையில் பல இந்திய தயாரிப்புகளை இலங்கையில் விற்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 3 வருடத்தில் அந்நாட்டு உள்கட்டமைப்பு திட்டத்திலும் இந்திய நிறுவனங்கள் அசத்தி வருகிறது.உதாரணமாக அதானி குழுமம் துறைமுகத்தில் இருந்து மின்சாரம் வரையில் பல துறையில் இலங்கையில் முதலீடு செய்து வருகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் ஏற்கனவே இலங்கையில் செயல்பட்டு வந்த ஏர்டெல் மொத்தமாக வெளியேற முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.இலங்கையின் தொலைத்தொடர்பு சந்தையில் முன்னிலை வகிக்கும் டைலாக் ஆக்சியாடா (Dialog Axiata) நிறுவனம், இந்தியாவின் பார்தி ஏர்டெல் நிறுவனம் 100% பங்குகளை வைத்திருந்த அதன் இலங்கை கிளை நிறுவனத்தை (Bharti Airtel Lanka) முழுவதுமாக வாங்கியுள்ளது.Dialog Axiata நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் கைப்பற்றியுள்ளதாக ஜூன் 26 ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் அறிவித்தது. இதன் கைப்பற்றல் பணிகள் பணமாக இல்லாமல் பங்கு மாற்று ஒப்பந்தம் (Share Swap Deal) மூலம் முடிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பார்தி ஏர்டெல் நிறுவனம், டைலாக் ஆக்சியாடா பங்குகளை வாங்கியுள்ளது.டைலாக் நிறுவனம் ஏர்டெல் லங்காவின் 100% பங்குகளையும் பெற்றுள்ள நிலையில், இதன் மதிப்புக்கு இணையாக பாரதி ஏர்டெல் நிறுவனத்திற்கு டைலாக் நிறுவனத்தின் 10.355% பங்குகளை அளித்துள்ளது.ஏப்ரல் 2024 இல், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணையம் பாரதி ஏர்டெல் லங்காவை பங்கு மாற்று ஒப்பந்தம் மூலம் டைலாக் ஆக்சியாடா நிறுவனத்துடன் இணைப்பதற்கான அனுமதியை வழங்கியது. இதை தொடர்ந்து தற்போது பாரதி ஏர்டெல் லங்கா மொத்தமாக டைலாக் ஆக்சியாடா உடன் இணைக்கப்பட்டு உள்ளது.இதன் வாயிலாக இலங்கையில் உள்ள பாரதி ஏர்டெல் வாடிக்கையாளர்கள், டைலாக் ஆக்சியாடா வாயிலாக தடையற்ற வலையமைப்பில் சிறந்த தொலைத்தொடர்பு சேவைகளைப் பெற முடியும் என பாரதி ஏர்டெல் நிர்வாக இயக்குநர் கோபால் வித்தல் தெரிவித்திருந்தார்.இலங்கையில் 17 மில்லியனுக்கும் அதிகமான வாடிககையாளர்களை கொண்ட மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக டைலாக் ஆக்சியாடா விளங்குகிறது. ஏர்டெல் லங்கா சுமார் 5 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.பாரதி ஏர்டெல் மற்றும் டைலாக் ஆக்சியாடா நிறுவனங்கள், 2023 ஆம் ஆண்டு மே மாதமே இலங்கையில் தங்கள் வர்த்தகத்தை இணைப்பதற்கான ஒப்பந்தத்தை செய்துக் கொண்டது, ஆனால் இலங்கை டெலிகாம் ஆணையம் அனுமதி வழங்கவில்லை, இதனால் தாமதமானது.