அண்ணன் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட நேற்றிரவிலிருந்து சொல்லொன்னா துயரம் எம்மை சூழ்ந்துள்ளது. இந்த மனநிலையை எப்படி விவரிப்பது என்று கூட புரியவில்லை. எமது உணர்வுகளை எந்த சொற்களாலும் கடத்தவியலாது என்பது மட்டும் உறுதி. அவரது சமூகப் பங்களிப்புகளை அறியாத, அவரை ஒருமுறையேனும் சந்தித்து உரையாடிராது ஒருவருக்கு நாம் ஏன் இப்படி தனித்து விடப்பட்டது போல் உணர்கிறோம், தத்தளிக்கிறோம் என்பது புரியாது.
ஒருவர் தம்மை அம்பேத்கரியராக நினைத்துக் கொள்ளலாம் ஆனால் அதனாலேயே அவர் அம்பேத்கரியர் ஆகி விட முடியாது. ஆனால் தாம் வரிந்து கொண்ட அம்பேத்கரிய தத்துவத்துக்கு தம் இறுதி மூச்சு வரைக்கும் உண்மையாக இருந்தவர் அண்ணன். பாபாசாகேபை ஆழமாக உள்வாங்கி தேர்தல் அரசியல் வெற்றியை விட சமூக பண்பாட்டு மாற்றமும் முன்னேற்றமுமே நம் மக்களின் விடியலுக்கு வழி என தெளிந்து நடைமுறைப்படுத்திக் காட்டியவர். அவரால் ஏற்றம் பெற்ற எத்தனையோ மக்கள் அவருக்கு தம் வாழ்நாள் முழுதும் நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள்.
நாம் தொடர்ந்து எழுதி வருவதும் இந்த புரிதலை கொண்டுதான். பெரிய பெரிய இலட்சியங்கள் நமக்கு வேண்டாம். அடிப்படையான உளவியல் சிக்கலில் இருந்து நம் மக்களை மீட்டு அவர்களை அடுத்தக் கட்டத்துக்கு கைத்தூக்கி விடும் செயல்தான் மிகவும் முக்கியம். அதற்காக தாம் வசிக்கும் பகுதிகளில் அல்லது இயங்கும் தளத்தில் தம் ஆளுமையை வளர்தெடுத்து பெருக்கி நிலைநிறுத்தி செயல்படும் ஒரிவர் தன்முனைப்போடு வந்தால் கூட போதும் சமூக மாற்றத்தை நிகழ்த்தி விடலாம்.
அப்படி உளபூர்வமாக செயல்பட்ட முழுமையான ஆளுமைதான் அண்ணன் ஆம்ஸ்டாங் அவர்கள். அவரை நம்பி பட்டியல் சாதியினர் மட்டுமல்ல எந்த ஒடுக்கப்பட்ட, ஏழை எளிய மனிதரும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவர் வீட்டு வாசலில் போய் நிற்கலாம். அவரை சந்தித்தால் தங்கள் பிரச்சனைகள் முடிவுக்கு வந்த விடுமென எத்தனையோ ஆயிரமாயிரம் மக்கள் நம்பிக்கையோடு இருந்தார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தவர்தான் அண்ணன் ஆம்ஸ்டாங் அவர்கள்.
அடுத்ததாக அம்பேத்கரிய தத்துவார்த்த அடிப்படையோடு கூடிய உரையாடலை தொடர்ந்து முன்னெடுப்பதின் மூலமாக மக்களை அரசியல்மய படுத்தும் செயல்பாட்டில் முனைப்போடு இருந்தவர் அண்ணன். மூச்சுக்கு முன்னூறு முறை பாபாசாகேப் பாபாசாகேப் என பாசமாக சொல்லுவார். அவர் உள்ளும் புறமுகாக இருந்து செயல்பட்டது அந்த பாபாசாகேபேதான் என நினைக்கிறேன் நான். நீண்ட நேரம் பேசிக் கொண்டேயிருப்பார். ஒரு சொல்லைக் கூட தவற விட முடியாதபடிக்கு அத்தனை செறிவான பேச்சாக இருக்கும். சேரிகளில்தான் அம்பேத்கர், மார்க்ஸ், பெரியாரென மூன்று தத்துவங்களையும் பேச முடியும் ஊர் தெருக்களில் அம்பேத்கரியம் நுழைய முடியாது என அடிக்கடி சொல்லுவார். நாம் எல்லோரையும் அரவணைத்து செல்லுவோம் மற்றவர்கள் மெல்ல வரட்டும் என்பார். அவர் பேசி இனி கேட்கவே முடியாது என்கிற இந்த கையறு நிலையை எண்ணி கலங்கி நிற்கிறோம் நாம். இப்படி பலி கொடுத்து விட்டோமே!
முகத்தில் எப்போதும் தவழும் மென் புன்னகையையும், வியர்வை அரும்பும் மேலுதடை விரல்களால் துடைத்துக் கொண்டே பேசுவதையும் எத்தனை மணி நேரங்கள் ஆனாலும் இரசித்துக் கொண்டிக்கலாம். அவரை சந்தித்த மறு நொடியிலேயே நம்மை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளும் பேரழகன் நம் அண்ணன். குழந்தை போன்ற அந்த தோற்றத்தின் பின்னே வெகுமக்களின் வாழ்வியலையும் அவர்களின் சிக்கல்களையும் முழுவதும் கற்றறிந்த அனுபவம் மிக்க பெரும் கிழவராக வாழ்ந்தவர். இந்த வாரமோ அடுத்த வாரமோ அண்ணனை சென்று சந்திக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இனி அது நிகழவே நிகழாது என்பதை நினைக்கையில் வெறுமை சூழ்கிறது.
அவர் விதைக்கப்பட்ட மண்ணை நோக்கி திரண்ட வாருங்கள் உறவுகளே. இப்போதைக்கு அவர் வளர்தெடுத்த பிள்ளைகளும் நாமும் ஒருவரை ஒருவரை தேற்றிக் கொள்வோம்.