தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: தமிழ்நாட்டில் படுதோல்வி அடைந்த பிறகும் அதிலிருந்து மத்திய அரசு பாடம் கற்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.07.2024) தருமபுரி மாவட்டம், பாளையம் புதூர் ஊராட்சி, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ஊரகப் பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை தொடங்கி வைத்து, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அதில் அவர் தெரிவித்ததாவது:
பெரிய பெரிய திட்டங்களை, மாவட்டத்திற்கு தேவையானவற்றை திட்டமிட்டு செய்து தருகிறோம். பொதுமக்களின் தனிப்பட்ட கோரிக்கைகளையும் கேட்டு, செயல்படுத்தி கொடுப்பது மூலமாக, எல்லோரும் மனநிறைவு அடையும் ஆட்சியாக நம்முடைய திமுக அரசு செயல்பட்டு வருகிறது. பல்வேறு நலத்திட்டங்கள் மூலமாக ஒவ்வொரு வீட்டிற்கும், ஏதாவது ஒரு பயன்கிடைக்க அதில் அவர்கள் பயனடைந்து கொண்டு வருகிறார்கள்.
அதேபோன்று ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூலமாக ‘யாருக்கும் எந்தக் குறையும் இல்லை’ என்ற நிலையை உருவாக்க நாங்கள் இப்போது பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
இப்படி மக்களுக்காக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. அதனால்தான், அவதூறுகள் பொய்ப் பிரச்சாரங்கள் மூலமாக இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த நினைக்கிறார்கள்.
வாக்களித்தவர்கள், வாக்களிக்க மறந்தவர்கள் என்ற எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைத்து மக்களுக்குமான அரசாக நாம் செயல்பட்டு வருகிறோம்! ஆனால், இதே பெருந்தன்மையை மற்றவர்களிடம் பார்க்க முடியவில்லை! தமிழ்நாட்டில் தொடர் தோல்வி, படுதோல்வி அடைந்த பிறகும் அதிலிருந்து மத்திய அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை! தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையாக இருக்கும் மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களுக்கு கூட நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு மனமில்லை! நல்ல குணமில்லை! பாடம் கற்றுக்கொள்வதற்கு நினைப்பும் இல்லை! தங்களின் பத்து வருட காலத்தில் தமிழ்நாட்டில் எந்த ஒரு பெரிய திட்டமும் செய்யவில்லை.
மத்திய அரசு என்பது, விருப்பு வெறுப்புகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமான பொதுவான அரசாக செயல்பட வேண்டும் என்பதை இனியாவது அவர்கள் உணர வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.