Thursday , November 21 2024
Breaking News
Home / Politics / வயநாடு நிலச்சரிவு: தமிழ்நாடு காங்கிரஸ் ரூ. 1 கோடி நிதியுதவி!
MyHoster

வயநாடு நிலச்சரிவு: தமிழ்நாடு காங்கிரஸ் ரூ. 1 கோடி நிதியுதவி!

வயநாடு நிலச்சரிவு: தமிழ்நாடு காங்கிரஸ் ரூ. 1 கோடி நிதியுதவி!

கு.செல்வப்பெருந்தகை : வயநாடு நிலச்சரிவால் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ. 1 கோடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நேற்று இரவும், அதிகாலையிலும் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத அதி கடும் கனமழையின் காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவின் பாதிப்பால் 167 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

இது அனைவரது நெஞ்சையும் உலுக்குகிற கோரமான ஒரு நிகழ்வாகும். நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு கேரள மாநில அரசு நிர்வாகம் ராணுவ உதவிக்குழு மற்றும் இதர மாநில பேரிடர் மீட்புக்குழுக்களோடு மீட்புப் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கும், படுகாயமடைந்தவர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் இழப்பீட்டுத்தொகை அறிவித்திருக்கிறது. ஆனால் இந்த எதிர்பாராத இயற்கை சீற்றத்தின் காரணமாக வரலாறு காணாத பேரிழப்பை வயநாடு மக்கள் சந்தித்திருப்பது மிகவும் வேதனையை தருகிறது.

இந்த நிலச்சரிவின் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். வயநாட்டில் ஏற்பட்ட இந்த பயங்கர நிலச்சரிவில் இரண்டு தமிழர்கள் உயிரிழந்திருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன. அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் இழப்பீட்டுத்தொகை வழங்கியதோடு கேரள மாநில அரசுக்கு ரூ. 5 கோடி நிவாரணத்தொகை வழங்கியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக முழு மனதோடு வரவேற்கிறேன்.

அண்டை மாநிலத்தில் உள்ள நமது சகோதரர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிலையில் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட துயரமான நிகழ்வை தேசிய பேரிடராக கருதி மத்திய அரசு அதற்கு தகுந்த நிதி உதவி செய்வதோடு, இந்திய ராணுவத்துணையோடு முழு வீச்சில் தேவையான நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவின் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்க தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ரூபாய் 1 கோடி கேரள முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு தலைவர் ராகுல்காந்தி அவர்கள் மூலமாக காசோலை வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேரள மாநில அரசு மற்றும் பேரிடர் மீட்புக்குழு எடுக்கும் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு வயநாடு மாவட்டத்திற்கு அருகில் உள்ள நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், உதகமண்டல சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினருமாகிய ஆர். கணேஷ் அவர்களின் ஏற்பாட்டில் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்கண்ட 80 காங்கிரஸ் நிர்வாகிகள் கொண்ட மீட்புக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இக்குழுவின் பட்டியலும், அதன் முக்கிய நிர்வாகிகளின் தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்ட மீட்புக்குழுவினரோடு தொடர்பு கொண்டால் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும், நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியும், கூடலூர் சட்டமன்ற காங்கிரஸ் நிர்வாகிகளும் தயாராக உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Bala Trust

About Admin

Check Also

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ பின்னணி…

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ, அறிமுகச் சுற்றில் தனது பின்னணியைப் பகிர்ந்து கொண்டார்: *வயது …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES