நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் மத்திய அரசுக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்பிக்கள் திடீர் போராட்டத்தை நடத்தினர்.
ஆயுள் காப்பீடு மீதான 18 சதவிகித ஜிஎஸ்டி வரியை திருப்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.
மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு மீதான வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.
ஒரு நபர் தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நோ்ந்தால், தனது குடும்பத்தினா் பொருளாதார ரீதியாக கஷ்டப்படக் கூடாது என்பதற்காகவே ஆயுள் காப்பீடு எடுப்பதாகவும், அதற்கு செலுத்தும் பிரீமியம் தொகையில் 18 சதவீதம் அரசுக்கு வரியாக செலுத்தினால் இது குடும்பங்களின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என்றும், எனவே ஆயுள் காப்பீடு மீதான 18 சதவிகித ஜிஎஸ்டி வரியை திருப்பப் பெற வலியுறுத்தி தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தது.
அதேபோல், ஆயுள், மருத்துவ காப்பீட்டு பிரிமீயம் தொகை மீது விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டியை (சரக்கு-சேவை வரி) ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி முன்னதாக கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.