Thursday , November 21 2024
Breaking News
Home / Politics / சென்னையில் ஆகஸ்ட் 18ம் தேதி ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்!!
MyHoster

சென்னையில் ஆகஸ்ட் 18ம் தேதி ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்!!

சென்னையில் ஆகஸ்ட் 18ம் தேதி ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்!!

சென்னை: சென்னையில் ஆகஸ்ட் 18ம் தேதி ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார்.

தமிழகத்தில் 5 முறை முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை மற்றும் மேலவை உறுப்பினராகவும் இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி முதல் ஓர் ஆண்டுக்கு கொண்டாட முடிவு செய்யப்பட்டது.இதை முன்னிட்டு தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மறைந்த முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘நினைவு நாணயம்’ வெளியிட ஒன்றிய அரசுக்கு கடந்தாண்டு ஜூலை 23ம் தேதி கடிதம் எழுதினார். இந்த நாணயத்தை, கடந்த ஜூன் 3ம் தேதி கலைஞரின் நூறாவது பிறந்தநாளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் இருந்தது. நாணயத்திற்கான நடைமுறைகள் பணிகள் முடிவடையாததே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

தற்போது இவை அனைத்தும் முடிந்து கடந்த மாதம் நாணயம் வெளியிடுவதற்கான அனுமதி கடிதத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கையெழுத்திட்டுள்ளார். கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள் ரூ.100 நினைவு நாணயம், அதன் அமைப்பு, உள்ளடக்கம் விலை ஆகியவை முடிவு செய்யப்பட்டது. இதன்படி இந்த நாணயத்தை அச்சிடுவதற்கு கடந்த ஜூலை 12ம் தேதி மத்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து கலைஞரின் நினைவு நாணயத்திற்கான மாதிரி வரைபடம் தமிழக அரசிடம் இருந்து பெறப்பட்டது. இதை வடிவமைக்கும் பணியை ஒன்றிய நிதியமைச்சகம் செய்து வந்தது. நாணயத்தை, ஒன்றிய நிதி அமைச்சகத்தின் உத்தரவின்படி இந்திய ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிடுகிறது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ‘டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி’ என்ற பெயருடன், ‘தமிழ் வெல்லும்’ என்ற தமிழ் வாசகம் அவரது நினைவு நாணயத்தில் இடம்பெற உள்ளது. கலைஞரின் நூற்றாண்டு நாணயம் வெளியிடுவதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்பார்வையில் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி வருகிற 18ம் தேதி சென்னை, கலைவாணர் அரங்கில் விழா நடைபெறுகிறது. ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கலைஞரின் 100 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் நாணயத்தை பெற்றுக் கொள்கிறார். விழாவில், திமுக முன்னணி தலைவர்கள் மற்றும் கட்சியினர் மட்டுமல்லாது கூட்டணி கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இவ்விழாவில் பங்கேற்க நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

* நாணயத்தின் விலை ரூ.2,500?

இந்த நாணயத்தின் ஒரு பக்கம் சிங்கத்தின் தலையுடன் கூடிய அசோக தூண், ‘சத்யமேவ ஜெயதே’, ‘பாரத்’ ஆகிய வார்த்தைகள் தேவநாகரி எழுத்திலும் ‘இந்தியா’ என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். மறுபக்கம் நாணயத்தின் மையத்தில் ‘கலைஞர் எம்.கருணாநிதி’ உருவப்படமும், கீழே அவர் பயன்படுத்திய ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகமும் இடம் பெறுகிறது. ‘கலைஞர் எம்.கருணாநிதி பிறந்த நூற்றாண்டு’ (1924-2024) என தேவநாகரி எழுத்திலும், ஆங்கிலத்திலும் இடம்பெறும்.

சுமார் 35 கிராம் எடை கொண்ட இந்த ரூ.100 நாணயத்தில் 50 சதவீதம் வெள்ளியும், 40 சதவீதம் தாமிரமும், நிக்கல் மற்றும் துத்தநாகம் முறையே தலா 5 சதவீதமும் கலந்திருக்கும் என ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்விலை ரூ.2,500 என ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நாணயம் காசாலைகளில் அச்சிடப்பட்டு வந்தவுடன் ரிசர்வ் வங்கி விற்பனையகங்கள் மற்றும் தபால் நிலையங்களில் விற்பனைக்கு வரும் என ஒன்றிய நிதித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Bala Trust

About Admin

Check Also

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ பின்னணி…

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ, அறிமுகச் சுற்றில் தனது பின்னணியைப் பகிர்ந்து கொண்டார்: *வயது …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES