Friday , October 18 2024
Breaking News
Home / Politics / ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் ஆர்.என். ரவி வழங்குகிற தேநீர் விருந்தை தமிழக காங்கிரஸ் புறக்கணிக்கிறது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் ஆர்.என். ரவி வழங்குகிற தேநீர் விருந்தை தமிழக காங்கிரஸ் புறக்கணிக்கிறது.

தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை பதிவு செய்கிற வகையில் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் ஆர்.என். ரவி வழங்குகிற தேநீர் விருந்தை தமிழக காங்கிரஸ் புறக்கணிக்கிறது. இதன்மூலம் தமிழகத்தின் உரிமைக் குரலை ஓங்கி ஒலிக்கிற வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதற்கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுகிற செயலை தொடர்ந்து செய்து வருகிறார். இவரது பேச்சுகளாலும், நடவடிக்கைகளாலும் எழுந்த சர்ச்சைகளை போல இதற்கு முன்பு எந்த ஆளுநர் மீதும் எழுந்ததில்லை. அரசமைப்புச் சட்ட உறுப்பு 163-ன்படி தமிழக அமைச்சரவையின் உதவியுடனும், அறிவுரையின்படியும் தான் மாநில ஆளுநர் செயல்பட வேண்டும். ஆனால், தமிழக ஆளுநர் தமிழக அமைச்சரவையின் பரிந்துரைகளை உதாசீனப்படுத்துகிற போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்.

தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய 12-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நீண்டகாலமாக இழுத்தடித்து வருகிறார். அரசமைப்புச் சட்டப்படி ஒன்று மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது அவரது கருத்தை கூறி சட்டப்பேரவைக்கு திரும்ப அனுப்ப வேண்டும். அதற்கு பிறகு தமிழக சட்டப்பேரவை அரசமைப்புச் சட்ட உறுப்பு 200-ன்படி திரும்பவும் அந்த மசோதாவை திருத்தத்துடனோ அல்லது திருத்தம் இல்லாமலே நிறைவேற்றி திரும்ப ஆளுநருக்கு அனுப்பினால் அதற்கு ஒப்புதல் வழங்குவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை. ஆனால், அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அளித்த தீர்ப்பில் ஆளுநருக்கு சம்மட்டி அடி கொடுக்கிற வகையில் தெளிவான தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பில் சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார் ? அரசமைப்பு சட்டப்படி செயல்படாமல் இருப்பதற்கு அவருக்கு யார் அதிகாரம் அளித்தார்கள் ? இதன்மூலம் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கிறார். அரசமைப்புச் சட்டம் ஆளுநருக்கு தெரியுமா ? தெரியாதா ? உச்சநீதிமன்றத்தோடு விளையாட வேண்டாம் என கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதேபோல, அமைச்சர் பொன்முடி மீதான தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதினார். ஆனால், ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்காமல் சண்டித்தனம் செய்தார். இதற்கு பிறகு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பெறப்பட்ட ஆணையின்படி பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டிய நிர்ப்பந்த நிலை ஆளுநருக்கு ஏற்பட்டது. இதற்கு பிறகும் அவர் பாடம் கற்றதாக தெரியவில்லை. இத்தகைய நடவடிக்கைகளின் மூலமாக தமிழக ஆளுநர் தாம் வகிக்கிற பதவியின் மூலம் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடும், விரோத போக்கோடும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதா கிராமப்புற மக்களுக்கு எதிரானது என மசோதாவை மறுபரிசீலனை செய்வதற்கு ஆளுநருக்கு என்ன உரிமை இருக்கிறது ? மசோதாவை நிறுத்தி வைத்தாலே அது நிராகரிக்கப்பட்டதாகத் தான் பொருள் என்று புதிய வியாக்யானம் கூறுவது அப்பட்டமான சட்டவிரோத செயலாகும். தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ளாத மும்மொழி திட்டம், புதிய கல்விக் கொள்கை, சனாதன தர்மம் தான் நம்; பாரதத்தை உருவாக்கியது மற்றும் ஜியூ போப்பின் திருக்குறள் மொழி பெயர்ப்பு ஆன்மா இல்லாத சவம் போல் இருக்கிறது என்றும், திருவள்ளுவர் ஒரு ஆன்மீகவாதி என்று மதச்சாயம் பூசுவது என்று தமிழர்களின் உணர்வுகளுக்கு விரோதமாக ஆணவத்தோடும், அதிகார மமதையோடும் கருத்து கூறியவர் ஆளுநர் ஆர்.என். ரவி.

அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொண்ட மதச்சார்பற்ற கொள்கைக்கு விரோதமாக, எந்தவொரு நாடும் ஒரு மதத்தை சார்ந்து தான் இருக்க முடியும். அதில் இந்தியா விதிவிலக்கல்ல என்று பேசியதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. மக்கள் எழுச்சியினால் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தை கொச்சைப்படுத்தி ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக பேசியது, நாடு முழுவதும் இளைஞர்களால் எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்ட அக்னிபாத் திட்டம் ஒரு புரட்சிகரமான திட்டம் என்று கூறியது அனைத்துமே மக்கள் விரோத கருத்துகளாகும்.

தமிழ்நாடு பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிப்பதில் தமிழக அரசின் பரிந்துரையை புறக்கணித்து ஆளுநர் தன்னிச்சையாக தேடுதல் குழுவை அமைத்து செயல்பட்டு வருகிறார். இதனால் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படாமல் நிர்வாகம் முடங்கிக் கிடக்கிறது. சென்னை உள்ளிட்ட நான்கு பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படாமல் பல மாதங்களாக காலியாக இருக்கிறது. இந்நிலையில் 20-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் வகையில் சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்காமல் எதேச்சதிகாரமாக செயல்பட்டு வருகிறார். இதன்மூலம் உயர்கல்வித்துறையை சீரழித்து வருகிறார்.

தமிழக சட்டப்பேரவை ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தின் போது ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாகும். அந்த மரபின் அடிப்படையில் ஆளுநர் உரையை தயாரிப்பது மாநில அரசு. அதை முழுமையாக படிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. ஆனால், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அந்த உரையை முழுமையாக வாசிக்காமல் திரித்து, மாற்றி, விட்டு விட்டு வாசித்து புதிதாக சேர்த்து அவர் ஒரு உரையை வாசித்தது அப்பட்டமான சட்டப்பேரவை விதிமீறலாகும். இதன்மூலம் சட்டப்பேரவையின் மாண்பை அவமதித்த ஆளுநருக்கு பாடம் கற்பிக்கிற வகையில் தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி அதன்மூலம் தமிழக அரசின் உரையை அவைக் குறிப்பில் முழுமையாக இடம் பெறச் செய்து பேரவையின் மாண்பு காப்பாற்றப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. அரசின் செயல்பாடுகளை முடக்கி, வளர்ச்சியை பாதித்து மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து, பா.ஜ.க.வின் ஊதுகுழலாக செயல்படுகிற தமிழக ஆளுநரின் பதவிக் காலம் ஜூலை 31 ஆம் தேதி முடிவடைந்தது. அவரை மீண்டும் ஆளுநராக நியமிக்கக் கூடாது என்பது தான் தமிழக மக்களின் ஏகோபித்த கோரிக்கையாகும்.

இந்நிலையில் தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை பதிவு செய்கிற வகையில் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் ஆர்.என். ரவி வழங்குகிற தேநீர் விருந்தை தமிழக காங்கிரஸ் புறக்கணிக்கிறது. இதன்மூலம் தமிழகத்தின் உரிமைக் குரலை ஓங்கி ஒலிக்கிற வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

Bala Trust

About Admin

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES