கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகள் உள்ளன. இங்கு அரவக்குறிச்சி, பள்ளபட்டி ஆகிய பேரூராட்சிகள் உள்ளன. சுமாராக 50% மேல் பெண்கள் அரவக்குறிச்சி பகுதியில் வசித்து வருகின்றனர். தாலுகா தலைமையிடமான அரவக்குறிச்சி சுமாராக 40 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. ஆனால் இங்கு ஒரு மகளிர் காவல் நிலையம் கூட இல்லை.
பெண்கள் புகார் கொடுக்க அரவக்குறிச்சி பகுதியில் இருந்து 40 கி.மீ தூரமுள்ள கரூர் காவல் நிலையத்திற்குத்தான் செல்ல வேண்டிய சிரமமான நிலை உள்ளது. அரவக்குறிச்சியில் மகளிர் காவல் நிலையம் அமைக்க உயர் அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அரவக்குறிச்சியில் காவல் நிலையம் அமைக்கவேண்டி தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியினர் கூறுகையில், கரூர் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் அலுவலகம் கடந்த ஒரு சில மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனை உடனடியாக திறக்க வேண்டும் எனவும் மேற்கண்ட மனுவில் தெரிவித்துள்ளதாகக் கூறினர்.