தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலை உருவாகாது; பிரிட்டன் வைரஸ் பற்றி அச்சம் வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிவேகமாக ஜெட் வேகத்தில் பரவிய கொரோனா அரசின் நடவடிக்கையால் அதன் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது. இதனிடையே இங்கிலாந்தில் பரவிய புதிய வகை கொரோனா தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. அரசு பிரிட்டனில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; கொரோனா தொற்று ஆரம்பித்த நாள் முதல் களத்தில் நின்று செயல்பட்டு வருகிறோம். தற்போது வரை 5 லட்சம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 1,600 படுக்கைகள் உளது. வெளிநாடுகளில் இருந்து 1438 பேரில் 13 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 12 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 120 தனிப்படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாதமாக பிரிட்டனில் இருந்து தமிழ்நாடு வந்தவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலை உருவாகாது; பிரிட்டன் வைரஸ் பற்றி அச்சம் வேண்டாம். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும். விதிமுறைகளை முறையாக கடைபிடித்தால் ஊரடங்கு கொண்டுவர அவசியமில்லை என கூறினார்.