சென்னை: தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1-ம் தேதி முதல் கட்டணம் உயர்கிறது.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 63 சுங்கச்சாவடிகள் உள்ளன.
இவற்றில் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் கட்டணத்தை மாற்றியமைப்பது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு ஏப்.1-ம் தேதி முதல் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
அதன்படி, அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
இவற்றில், ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் ரூ.5 முதல் 20 வரையிலும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.100 முதல் 400 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், 20-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதம் முதல் கட்டணம் உயர உள்ளதாக நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பழனிசாமி கண்டனம்: சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியிருப்பதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுமக்களின் போக்குவரத்துக்கு பெரும் சுமையாகவும், விலைவாசி உயர்வுக்கும் வித்திடும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுமாறு வலியுறுத்துகிறேன்.
வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற மக்களவையில் குரல் கொடுப்பார்கள் என்ற உறுதியை தமிழக மக்களுக்கு நான் அளிக்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 29-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகத்தில் இன்று முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, இரணியல், திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை: நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரைச் சேர்ந்தமாற்றுத் திறனாளியான மணி வண்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
7 கோடி மாற்றுத் திறனாளிகள்: நாடு முழுவதும் 7 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். அனைத்து மாநிலங்களிலும் இவர்களுக்கு முறையான இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ள போதும், அது முறையாக அமல்படுத்தப்படவில்லை. இதேபோல், தேர்தலிலும் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை.
நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் சட்டப்பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி கடந்த ஜனவரியில் மனு அளித்தேன்.
தேர்தல் ஆணையம் மறுப்பு: இவ்வாறு மாற்றுத் திறனாளி களுக்கு இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது.
எனவே, நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் சட்டப்பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கும், தேர்தல் ஆணையத் துக்கும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரியுள் ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில வழிக் கல்வி பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.
இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை இந்த மாத இறுதிக்குள் நடத்தி முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வில் சுமார் 77,865 மாணவர்கள் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் தேர்வுகளில் பங்கேற்கவில்லை என கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் உள்ள 75 மையங்களில் நடைபெறவுள்ளன.
இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வரும் மே 6-ம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4ம் தேதி துவங்கி மார்ச் 25ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது.
நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் நாளை பங்குனி உத்திர திருவிழா நடைப்பெற உள்ளதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
எனினும், முக்கிய் அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் அன்றைய தினம் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு கொண்டாட்டமாக நடைப்பெறும். திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற தலமாகவும் விளங்கும் நெல்லையப்பர் கோயில், நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் திருநெல்வேலி என பெயர் வரக் காரணமாகவும் அமைந்துள்ளது.
நெல்லை டவுனில் அமைந்துள்ள சுவாமி நெல்லையப்பர் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இம்மாதம் 15-ம் தேதி பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடியேற்றம் சுவாமி சன்னதியின் உள் பிரகாரத்தில் நடைபெற்றது. அங்கு உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிலையில், பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு நாளை 25ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பங்குனி உத்திர திருநாள் 25.03.2020 திங்கள்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் அரசு பொதுத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவிக்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்கள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், நாளை 25.03.2024 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா மற்றும் ஹைதரபாத் அணிகளுக்கிடையேயான போட்டி திரில்லாக நடந்திருந்தது. கொல்கத்தா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
கொல்கத்தா சார்பில் டெத் ஓவரில் 24.5 கோடிக்கு வாங்கப்பட்ட ஸ்டார்க்கே மரண அடி வாங்க, 22 வயது இளம் வீரரான ஹர்ஷித் ராணா கடைசி ஓவரில் 13 ரன்களை டிஃபண்ட் செய்திருக்கிறார். அந்த கடைசி ஓவர் எப்படி ஹர்ஷித்துக்குக் கிடைத்தது என்பதே ஒரு சுவாரஸ்ய கதைதான்.Harshith
ஹென்றிச் க்ளாசென் கொல்கத்தா அணியின் பௌலர்களை வெளுத்தெடுத்துக் கொண்டிருந்தார். அதில்தான் மிக முக்கியமாக ஸ்டார்க் வீசிய 19 வது ஒவரில் 26 ரன்களை வழங்கியிருந்தார். கடைசி ஓவரில் சன்ரைசர்ஸின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட போது அந்த ஓவரை நன்றாக வீசி க்ளாசெனின் விக்கெட்டை வீழ்த்தி அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வெல்லவும் வைத்தார். ஹர்ஷித்துக்கு எப்படி கடைசி ஓவர் கொடுக்கப்பட்டது என ரஸல் போட்டிக்குப் பிறகு பேசியிருந்தார்.Harshithஹர்ஷித்தின் பந்துவீச்சு அவரது திடகாத்திரமான குணாதிசயத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. என்னிடம் வந்து கடைசி ஓவரை நான் வீச விரும்புகிறேன் என்றார். கேப்டனிடம் பேசி கடைசி ஓவரையும் வாங்கிவிட்டார். முதல் பந்தில் சிக்சர் கொடுத்த பிறகு மிகச்சிறப்பாக கம்பேக் கொடுத்திருந்தார்.’ என ரஸல் கூறியிருக்கிறார்.
கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அழுத்தமிகு சூழலில் ஹர்ஷித் எப்படி செயல்பட்டார் என பேசியிருக்கிறார். ‘கடைசி ஓவரில் 13 ரன்களுக்குள் சன்ரைசர்ஸை கட்டுப்படுத்த வேண்டும். எங்களிடம் அனுபவமிக்க பௌலர்கள் இல்லை. ஆனாலும் ஹர்ஷித்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. முடிவு என்னவாக இருந்தாலும் இதில் மாற்றம் இருந்திருக்காது. அவரும் ஆரம்பத்தில் கொஞ்சம் பதற்றமாக இருந்தார்.அவரின் கண்ணைப் பார்த்து ‘இது உனக்கான தருணம். விட்டுவிடாதே. உன்னை நீ நம்பு. ரிசல்ட்டை பற்றிக் கவலைப்படாதே.’ என்றேன். என ஸ்ரேயாஸ் கூறியிருக்கிறார்.
ரமண்தீப் சிங் கடைசி ஓவரில் ஹர்ஷித் ராணாவுக்கு ட்ரெஸ்ஸிங் ரூமிலிருந்து வந்த மெசேஜ் பற்றி பேசியிருந்தார். ‘கொஞ்சம் வேகமாக வீசினாலே க்ளாசென் சிக்சர்களாக விளாசியிருந்தார். அதனால், வேகத்தை எவ்வளவு குறைக்க முடியுமோ குறைத்து வீசுங்கள்.’ என ஹர்சித்துக்கு ட்ரெஸ்ஸிங் ரூமிலிருந்து மெசேஜ் வந்தது.’ இவ்வாறு ரமண்தீப் கூறியிருக்கிறார்.
ஹர்ஷித் ராணா நேற்று ஒரே போட்டியில் பல்லாயிரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார்.
ஹர்ஷித் ராணாவின் பந்துவீச்சு குறித்து உங்களின் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!
சென்னை: தமிழ்நாட்டில் மின்சார பயன்பாடு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று 19800 மெகாவாட் மின்சாரம் மக்களால் பயன்படுத்தப்பட்டு உள்ளது .
தமிழ்நாட்டில் இந்த கோடைகாலத்தில் மின்சார தடை நடக்காமல் இருப்பதாற்கான ஏற்பாடுகளை மின்வாரிய அதிகாரிகள் செய்து வருகின்றன.
வழக்கமாக ஏப்ரல் மாதத்தில்தான் தமிழகத்தில் மின் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து, முந்தைய ஆண்டின் அதிகபட்ச தேவையை விட அதிகமாக இருக்கும். இருப்பினும், இந்த ஆண்டு, தமிழ்நாடு ஏற்கனவே 19,305 மெகாவாட் என்ற உச்ச தேவையை பதிவு செய்துள்ளது. 2023ன் உயர் தேவையான 19,387 மெகாவாட்டை வரும் வாரத்தில் தமிழ்நாடு மீறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படியே நேற்று 19800 மெகாவாட் மின்சாரம் மக்களால் பயன்படுத்தப்பட்டு உள்ளது . அதீத மின் தேவை காரணமாக கடந்த வருடம் கோடை காலத்தில் மின் தடைகள் அதிகம் இருந்தது. அது ஆளும் திமுக மீது விமர்சனமாக மாறியது.
இந்த முறை லோக்சபா தேர்தல் வேறு வரும் நிலையில் மின்சார தடை பிரச்சனையாக மாற கூடாது. இந்த நிலையில் இந்த ஆண்டு அதேபோல் மின்தடை ஏற்பட கூடாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்., அதேபோல் பள்ளிகளில், கல்லூரிகளில் தேர்வு சீசன் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு டாங்கெட்கோ தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, TANGEDCO ஏற்கனவே மாநிலம் முழுவதும் அவ்வப்போது பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது, எனவே இந்த காலகட்டத்தில் பராமரிப்புக்காக ‘மின் தடை’ இருக்காது. அவசரகாலம் தவிர சப்ளையை நிறுத்தக் கூடாது என கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்சார துறை முக்கிய அறிவிப்பு: இபி தொடர்பான புகார்களை இனி செயலியில் அளிக்கலாம் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. TANGEDCO என்ற செயலியில் இதற்கான வசதி உள்ளது.
TANGEDCO செயலியை பயன்படுத்தி எளிதாக லாக் இன் செய்து உங்கள் புகாரை அளிக்கலாம். இதில் லாகின் செய்த பின் உங்கள் இபி நம்பர் மற்றும் போன் எண்ணை வழங்க வேண்டும். அதன்பின் என்ன மாதிரியான புகார் என்பதை கொடுக்க வேண்டும்.
மின்தடை, மீட்டர் பழுது, கூடுதல் மின்கட்டண வசூல் உள்ளிட்ட புகார்களை இனி செல்ஃபோன் 2 செயலியில் புகாரளிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது TANGEDCO. மின்னகத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 94987 94987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வேகமான நடவடிக்கை: தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக இனிமேல் அதிவேகத்தில் மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும் என்று அரசு சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளது.
புகார்கள்: அதன்படி புகார் கொடுத்த 2 மணி நேரத்திற்குள் மின்தடை தொடர்பான புகார்களை சரி செய்ய வேண்டும். மின்சார வயர்கள் தொடர்பான பிரச்சனை 5 மணி நேரத்திற்குள் தீர்க்க வேண்டும். பெரிய பிரச்சனைகள் , டிரான்ஸ்பார்ம் பிரச்சனைகளை 10 மணி நேரத்திற்குள் தீர்க்க வேண்டும்.
புதிய மின்சார இணைப்புகளை ஏற்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டால் 24 மணி நேரத்திற்குள் அதை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
44 மின் பகிர்மான வட்டங்களாக தமிழ்நாடு மின் வாரியம் தற்போது செயல்படுகிறது. இப்படி ஒவ்வொரு வட்டத்திலும் மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் செயல்படுகிறது. இந்த வாரியம்தான் மக்களின் குறைகளை போக்க உள்ளது.
புதிய நிறுவனம்: தமிழ்நாடு மின்சார வாரியத்தை மக்கள் மற்றும் நிர்வாக வசதிக்காக பிரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மின்சார வாரியம் இரண்டாக பிரிந்துள்ளது. மாநில மின் பயன்பாட்டு நிறுவனமான தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டாங்கேட்கோ) முறையாக இரண்டு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அதன்படி பசுமை ஆற்றல் செயல்பாடுகளுக்காக ஒரு புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிலக்கரி மற்றும் எரிவாயு அடிப்படையிலான அனல் ஆலைகளின் பராமரிப்பு உற்பத்தி , உட்பட முழு செயல்பாடுகளையும் கவனித்துக் கொள்ளும், அதே நேரத்தில் TN பவர் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் சிறந்த நிர்வாகம் மற்றும் செயல்பாட்டுத் திறனுக்காக மீட்டர் மற்றும் பில்லிங் உள்ளிட்ட விநியோக நடவடிக்கைகளைக் கையாளும். இதற்கு இடையில் பசுமை ஆற்றல் செயல்பாடுகளுக்காக ஒரு புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
பரிந்துரை: அதன்படி மின்சார வாரியமான Tangedco அமைப்பை 3 ஆக பிரிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அதாவது 3 நிறுவனங்களாக இதை மாற்ற பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மின்சார வாரியத்தின் கடன் 1.4 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. தற்போது வெளியாகி உள்ள இந்த பரிந்துரை அறிக்கை இந்த கடன் நிலைமையை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
என்ன பரிந்துரை: மின் உற்பத்தி, விநியோகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகிய துறைகளை கவனிக்கும் வகையில் தனி தனி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று இந்த பரிந்துரையில் கூறப்பட்டு உள்ளது. இதில் தமிழ்நாடு அரசுதான் இனி முடிவு எடுக்க வேண்டும். ஏற்கனவே சில மாநிலங்களில் மின்சார வாரியம் இப்படி 3 வகையாக பிரிந்து உள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் இதே ஐடியா கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) 2017 இல், மின்சார வாரியத்தை தனி விநியோக மற்றும் உற்பத்தி நிறுவனங்களாக பிரிக்க பரிந்துரைத்தது. ஆனால் அப்போது இந்த மாற்றம் செய்யப்படவில்லை.
விளம்பரம் இல்லாத பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களை பயன்படுத்த வேண்டுமென்றால் இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது.
ஏற்கனவே சில காலத்திற்கு முன்பு இது தொடர்பான முடிவை மெட்டா நிறுவனம் எடுத்து இருந்தது. இது மெட்டா நிறுவனத்தின் சந்தா மாதிரியின் ஒரு பகுதியாகும்.
இந்த கட்டண அறிவிப்புக்கு எதிராக, பல பயனர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த கட்டண அறிவிப்பானது இந்தியாவுக்கு பொருந்தாது எனவும், ஐரோப்பாவின் சில நாடுகளுக்கு மட்டும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியாகியுள்ள அறிவிப்புகளின் படி, பேஸ்புக் கட்டணம் EUR 5.99 (சுமார் ரூ. 540 ஆகவும், இன்ஸ்டாகிராம் கட்டணம் EUR 9.99 ஆக (சுமார் ரூ. 900) ஆகவும் குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
Congress: காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலுக்கான தேசிய அளவிலான 4-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் வெளியிட்டுள்ள 4வது பட்டியலில் 46 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 இடங்களில் ஏழு இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருவள்ளூர் (தனி) தொகுதியில் சசிகாந்த் செந்தில் போட்டியிடுகிறார். கிருஷ்ணகிரி – கே. கோபிநாத், கரூர் – ஜோதிமணி, கடலூர் – எம்.கே. விஷ்ணு பிரசாத், சிவகங்கை – கார்த்தி சிதம்பரம், விருதுநகர் – மாணிக்கம் தாகூர், கன்னியாக்குமரி – விஜய் வசந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை. 7 வேட்பாளர்களில் கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, விஜய் வசந்த், மாணிக்கம் தாகூர் ஆகியோருக்கு மீண்டும் காங்கிரஸ் தலைமை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் (தனி) தொகுதியில் போட்டியிடும் சசிகாந்த் செந்தில் முக்கியமான வேட்பாளாராக பார்க்கப்படுகிறார். இவர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார். மேலும், காங்கிரஸ் கட்சியின் ‘சென்ட்ரல் வார் ரூம்’ தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.