தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் வழிமறித்து சோதனை நடத்தினர்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கும் வகையில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 54 பறக்கும் படை குழுக்கள், 54 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 6 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவினர் தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தூத்துக்குடி 3-வது மைல் அருகே புள்ளியியல் துறை உதவி இயக்குநர் ஸ்மிருதி ரஞ்சன் பிரதான் தலைமையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஞானகுரு மற்றும் போலீஸார் அடங்கிய பறக்கும் படை குழுவினர் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேடபாளரும், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக தூத்துக்குடியில் இருந்து காரில் புறப்பட்டு, அந்த வழியாக வந்தார்.
அவரது காரையும் தேர்தல் பறக்கும் படையினர் வழிமறித்து, முழுமையாக சோதனை செய்தனர். சோதனைக்கு கனிமொழி முழுமையாக ஒத்துழைத்தார். அவரது காரில் பணமோ, பொருட்களோ எதுவும் இல்லை. தீவிர சோதனைக்கு பிறகு அவர் திருநெல்வேலிக்கு புறப்பட்டு சென்றார்.