
சென்னை: தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; “18வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான 2023 -2024 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதித் தேர்வுகள் 02.04.2024 அன்று தொடங்கி 12.04.2024 வரை நடைபெறும் எனவும், 13.04.2024 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஆசிரியர்கள் 19.04.2024 அன்று நடைபெற உள்ள 18வது மக்களவைத் தேர்தல் சார்ந்த பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணிகளையும் மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 23.04.2024 முதல் 26.04.2024 வரையில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்துதல், தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் அடுத்த கல்வி ஆண்டிற்கான (2024-2025) மாணவர்கள் சேர்க்கை போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், 26.04.2024 அன்று இக்கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.