ஊட்டி : 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் துவக்கி வைத்தார். பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் நடத்தி வருகிறது.
மாவட்டத்தின் முக்கிய இடங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் போட்ேடா ஸ்பாட்டுகள் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும், மனித சங்கிலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள், சமூக நலத்துறை பணியாளர்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணியாளர்கள் கலந்துக் கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிலையில், நேற்று ஊட்டி மத்திய பேருந்து நிலையத்தில், தேர்தல் பருவம்-தேசத்தின் பெருமிதம் என்ற மைய கருத்தின் படி, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அருணா துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 வாக்குப்பதிவு 19ம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாக்காளர்களிடையே நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஊட்டி மத்திய பேருந்து நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, ஊட்டி மத்திய பேருந்து நிலையத்தில் என் வாக்கு – என் உரிமை என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள செல்பி ஸ்பாட்டில் நின்று வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலெக்டர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்நிகழ்வில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அலுவலர் மற்றும் ஆவின் பொதுமேலாளர் ஜெயராமன், மகளிர் திட்ட இயக்குநர் காசிநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ) ஷோபனா, உதவி திட்ட அலுவலர் ஜெயராணி, ஊட்டி தாசில்தார் சரவணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.