ரஷ்யா: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் வெற்றி பெற்றார். 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தொடர்ச்சியாக 3வது முறையாக அதிபராகி சாதனையை முறியடித்திருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் மாஸ்கோவின் மேற்குப் பகுதியில் உள்ள க்ரோகஸ் நகரின் மையத்தில் உள்ள 6200 பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட இசையரங்கில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. சம்பவத்தின் போது அங்கு ரஷ்ய பேண்ட் இசைக் குழுவான ‘பிக்னிக்’ குழுவின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென துப்பாக்கிக் குண்டுகள் பாய பலர் சரிந்து விழுந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியது மட்டுமல்லாது அரங்குக்கு பயங்கரவாதிகள் தீவைத்தும் சென்றனர். உடனடியாக தகவலறிந்த காவல், தீயணைப்பு, பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த சம்பவத்தில் இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இத்தகைய கொடூர தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், மாஸ்கோவில் அப்பாவி மக்கள் மீது நடத்திய கொடூர தாக்குலை இந்திய தேசிய காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ரஷ்ய கூட்டமைப்புக்கும் காங்கிரஸ் தோளோடு தோளாக துணை நிற்கும். தீவிரவாதம் மனித குலத்திற்கும், அமைதிக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 60 பேர் உயிரிழந்தனர்.