மும்பை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக இருந்த தஹில்ரமணி கடந்த வருடம் பதவி உயர்வு பெற்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தஹில்ரமணி நியமிக்கப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையில் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த மாதம் 28-ம் தேதி வெளியிட்டிருந்தது.
அதன்படி, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே.மிட்டலை சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள தஹில்ரமணியை மேகாலயா நீதிமன்றத்துக்கும் இடமாற்றம் செய்து அறிவிப்பு வெளியானது. ஆனால், தஹில்ரமணி இடமாற்றத்தை ஏற்க மறுத்து கொலீஜியத்துக்கு கோரிக்கை அனுப்பியிருந்தார். இவரின் கோரிக்கையை கொலீஜியம் நிராகரித்துவிட்டது.
இந்நிலையில், தலைமை நீதிபதி பதவியை தஹில்ரமணி ராஜினாமா செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, தன் நெருங்கிய நண்பர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வமாக ராஜினாமா கடிதத்தை வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ராஜினாமா முடிவு, வழக்கறிஞர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, வரும் 9-ம் தேதி உயர் நீதிமன்ற வளாகத்தில் போராட்டமும் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
தலைமை நீதிபதியின் முடிவு குறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் சாந்த குமாரி, “தலைமை நீதிபதி தன் கருத்தை மட்டும்தான் தெரிவித்துள்ளார். ஆனால் எழுத்துபூர்வமாக இன்னும் ராஜினாமா கடிதம் எதுவும் வழங்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 நீதிபதிகள் உள்ளனர். இங்கு தலைமை நீதிபதியாக இருப்பது பெருமைக்குரிய ஒரு விஷயம். ஆனால், மேகாலயா உயர் நீதிமன்றத்தில் மொத்தம் நான்கு நீதிபதிகள் மட்டுமே உள்ளனர் அவர்களில் ஒருவர் தலைமை நீதிபதி. மூன்று நீதிபதிகளுக்கு மட்டும் இவர் தலைவராக இருக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் உச்ச நீதிமன்ற கொலீஜியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம்’ என வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தலைமை நீதிபதி சரியாக நிர்வாகம் செய்யவில்லையோ என்ற கேள்வி எழுகிறது. இதையடுத்து, தொடர்ந்து இதே நீதிமன்றத்தில் நீடிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார் தஹில்ரமணி, அதுவும் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
நிராகரிப்பால் தஹில்ரமணி பதவி விலகவுள்ளதாகக் கூறப்படுகிறது. அவரின் முடிவைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பொதுவாகத் தலைமை நீதிபதி யாரிடமும் அதிகமாகப் பேசமாட்டார். தான் உண்டு தன் வேலையுண்டு என இருக்கக்கூடியவர். நீதிமன்ற நிகழ்ச்சிகளைத் தவிர வெளி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டார். இடமாற்றத்துக்கான முழுமையான காரணம் தெரியவில்லை.” என்றார் இயல்பாக.
இதனையடுத்து, உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் செ.விஜயகுமாரிடம் பேசினோம். “உச்சநீதிமன்ற இடமாற்ற முறையில் எந்தவொரு வெளிப்படைத் தன்மையும் இல்லை. தஹில்ரமணியை எதற்காக இடமாற்றம் செய்கிறார்கள் என அமர்வுக்கும் தெரியவில்லை, பார் கவுன்சிலுக்கும் தெரியவில்லை. இதனால் அதிகார துஷ்பிரயோகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீதிபதிகள் இடமாற்றத்தைப் பழிவாங்கும் நோக்குடன் பயன்படுத்தக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் முன்னதாகவே கூறப்பட்டுள்ளது.
மூத்த வழக்கறிஞர் விஜயகுமார்தலைமை நீதிபதியின் இடமாற்ற நடவடிக்கை, நீதித்துறையின் சுதந்திரத்துக்கு எதிரானது.
தஹில்ரமணி கடந்த ஒரு வருடமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைதியாக வேலை செய்துகொண்டிருக்கிறார். இவர் எந்த சுயநல நபர்களுக்கும் இடம் கொடுத்ததில்லை. குறிப்பாக, குஜராத் பில்கிஸ் பானோ பாலியல் வழக்கில் தொடர்புடைய 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை வழங்கினார். அதற்குப் பழிவாங்கவே தற்போது இடமாற்றம் செய்யப்படுவதாகப் பலரும் கூறுகின்றனர்.
தஹில்ரமணி, உச்ச நீதிமன்றத்தின் சில நீதிபதிகளின் கருத்துக்குச் செவிசாய்க்கவில்லை என்றும், யாருக்கும் ஆதரவாக செயல்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. `நான் நேர்மையாக என் வேலையைச் செய்கிறேன்’ என்று நீதிபதிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் தஹில்ரமணி தெரிவித்திருந்தார்.
தலைமை நீதிபதியின் இடமாற்ற நடவடிக்கை, நீதித்துறையின் சுதந்திரத்துக்கு எதிரானது என்பதே எங்கள் கருத்து. இதனால் வரும் திங்கள்கிழமை, நீதிமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்துள்ளோம். செவ்வாய் அல்லது புதன்கிழமைகளில் நீதிமன்ற புறக்கணிப்பும் நடக்க வாய்ப்புள்ளது” என்றார்.
செய்தி : நா.யாசர் அரபாத்