Wednesday , December 17 2025
Breaking News
Home / தமிழகம் / ஆன்லைன் சினிமா டிக்கெட்: தமிழக அரசு பேச்சுவார்த்தை
NKBB Technologies

ஆன்லைன் சினிமா டிக்கெட்: தமிழக அரசு பேச்சுவார்த்தை

ஆன்லைன் சினிமா டிக்கெட்: தமிழக அரசு பேச்சுவார்த்தை பின்னணி!


தமிழக அரசு திடீரென்று தமிழ் சினிமா மீது மிகுந்த அக்கறைகொண்டு செயல்படுவது போன்ற ஒரு தோற்றம் கடந்த சில நாட்களாக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவால் உருவாக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படவேண்டும் என்று கோவில்பட்டியில் அமைச்சர் பத்திரிகையாளர்களிடம் பேசியபின் அதனடிப்படையில் சென்னையில் நேற்றைய தினம் திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிப்பாளர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து முறைப்படி இது சம்பந்தமான பேச்சுவார்த்தையை நடத்தவில்லை. தங்களுக்கு தெரிந்த அல்லது தங்களுக்கு அறிமுகமான அல்லது ஆளும் கட்சி ஆதரவாளர்களை அழைத்து பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது அரசு.

மறைந்த முதல்வர்கள் கலைஞர், எம். ஜி.ராமச்சந்திரன், ஜெயலலிதா ஆகியோர் முதல்வராக இருந்தபோது சினிமா துறையினருடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அப்போதெல்லாம் பதிவுபெற்ற சினிமா சங்கங்களின் நிர்வாகிகளை முறைப்படி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.

ஆன்லைன் டிக்கெட் சம்பந்தமாக அரசுடன் கூடி விவாதித்து முடிவு எடுக்க வேண்டியவர்கள் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், அதை வாங்கி விநியோகம் செய்யும் விநியோகஸ்தர்கள், அவர்கள் மூலமாக திரையரங்குகளில் படங்களை திரையிடும் திரையரங்கு உரிமையாளர்கள்.

தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லை. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் ஒன்றுபட்டு இணைந்திருக்கும் சங்கம் என்பது தற்போது இல்லை. நேற்றைய கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு இல்லை.

தமிழ் சினிமாவில் மிகப் பெரும் முதலீடு செய்து தொடர்ந்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் அழைப்பு இல்லை. கூட்டத்தில் அழையா விருந்தாளியாக கலந்துகொண்டதாக ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜேஎஸ்கே சதீஷ் ஆடியோ பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.

அப்படி என்றால் இந்த கூட்டம் யார் மூலம் என்ன நோக்கத்திற்காக நடத்தப்பட்டது என்பது பற்றி விசாரித்தோம். தமிழ்நாட்டிலுள்ள திரையரங்குகளை ஒற்றைச் சாளர முறையில் இணைக்க வேண்டும். தமிழக அரசு அதற்கு ஆவணசெய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நீண்டகாலமாக சினிமா விழாக்களில் பேசி வந்தார். சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை அவ்வப்போது சந்தித்து முறையிட்டு வந்தார். இதன் காரணமாக நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்திற்கு யாரையெல்லாம் அழைக்கவேண்டும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் அரசு அதிகாரிகள் ஆலோசனை கேட்டுள்ளனர்.

ஆலோசனைக் குழு என்ற ஒன்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருப்பதை தமிழக அரசு ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்கிறது கோட்டை வட்டாரம். ஆலோசனைக் குழுவில் மூத்த உறுப்பினர், பிரபலமான இயக்குநர் என்பதால் பாரதிராஜாவுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழையா விருந்தாளிகளாக சென்ற ஜேஎஸ்கே சதீஷ், கே.ராஜன் இருவரையும் வேண்டாவெறுப்பாக கூட்டத்தில் அனுமதித்துள்ளனர்.

நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து திரையரங்குகளிலும் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாக திரையரங்குகளில் டிக்கெட் வாங்க வருபவர்களுக்கு கணினி மூலமாகவும் டிக்கெட் வழங்கும் வசதியை ஏற்படுத்துவது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கு திரையரங்கு உரிமையாளர்களும் ஒப்புதல் தெரிவித்ததாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு தற்போது ஒரு டிக்கெட்டுக்கு 60 ரூபாய் வரை சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது

இதனை குறைப்பதற்கு சம்பந்தப்பட்ட ஆன்லைன் முன்பதிவு சேவையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இம் முடிவுகள் எந்த அளவிற்கு நடைமுறை சாத்தியமானது என்று திரையரங்கு உரிமையாளர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது, “இந்த முடிவுகள் எதுவுமே சாத்தியமில்லாதது இல்லை. ஆனால் ஆன்லைன் முன்பதிவு சேவையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் திரையரங்குகளில் முதலீடு செய்திருக்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு சம்மதம் தெரிவித்த திரையரங்கு உரிமையாளர்கள் பலர் இந்நிறுவனங்களிடம் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி கோடிக்கணக்கில் முன்பணமாக பெற்று தங்கள் திரையரங்குகளை நவீனப்படுத்தியவர்கள்.

தற்போதைய நிலை தொடர்ந்தால் மட்டுமே அவர்கள் வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியும் நிலைமை உள்ளது. இப்படி இருக்க தமிழக அரசு எடுத்த முடிவை திரையரங்கு உரிமையாளர்கள் எப்படி அமுல்படுத்தப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்கின்றனர்.

கடந்த வருடம் நடைபெற்ற திரைப்படத்துறை வேலை நிறுத்தத்தின் முடிவில் தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் முன்வைத்த பிரதான கோரிக்கையை தூசிதட்டி உள்ளது தமிழக அரசு. உண்மையில் இது நடைமுறைக்கு வருமா அல்லது 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் அரசு அறிவிக்கும் திட்டம் போன்று ஆகிவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தினம் அரவக்குறிச்சி நகர தலைவர் திரு. ரயில்வே ராஜேந்திரன் தலைமையில் காந்தி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES