Thursday , November 21 2024
Breaking News
Home / செய்திகள் / மன அழுத்தம் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் இந்திய இளம் தலைமுறையினர் மத்தியில் இதய நோய்கள் 200% அதிகரிப்பு.!
MyHoster

மன அழுத்தம் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் இந்திய இளம் தலைமுறையினர் மத்தியில் இதய நோய்கள் 200% அதிகரிப்பு.!

மன அழுத்தம் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் இந்திய இளம் தலைமுறையினர் மத்தியில் இதய நோய்கள் 200% அதிகரித்துள்ளது என மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்


● உலகின் மக்கள் தொகையில் 20%-க்கும் குறைவானதாக இருக்கின்ற போதிலும் உலகின் இதய நோய் சுமையில் 50% பங்கை இந்தியா கொண்டிருக்கிறது. இந்திய குடிமக்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, மனஅழுத்தம், சுற்றுசூழல் மாசு மற்றும் மரபணு அமைப்புகளே இதற்கு காரணம்.
● வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் ஆரம்பநிலையிலே கண்டறிவதன் மூலம் 80% மாரடைப்புகள் மற்றும் பக்கவாதங்கள் நிகழாமல் தடுக்க முடியும்; ஆனால் இதற்கு சரியான சமயத்தில் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியமாகிறது.

மதுரை, 28 செப்டம்பர் 2022: “நாட்பட்ட மற்றும் கடுமையான மனஅழுத்தம், உடல் உழைப்பற்ற மந்தமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமில்லாத உணவுகள் ஆகியவை ஒருங்கிணைந்து இளைஞர்களின் இதய ஆரோக்கியத்தை வேகமாக சேதப்படுத்தி வருகின்றன. இதனால், இதய இரத்த நாள நோய்களினால் ஏற்படும் இந்தியாவின் சுமை பன்மடங்காக உயர்ந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் அதிக வேலை செய்ய கூடிய 20 – 50 வயதில் உள்ள மக்கள் மத்தியில் கடும் அச்சுறுத்தலாக இதய நோய்களில் 200% அதிகரிப்பு காணப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக உலகளவில் இதய நோய்களுக்கான சுமையில் 50% பங்களிப்பை நமது நாடு கொண்டிருக்கிறது. இருப்பினும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, சரியான சமயத்தில் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை ஆகியவையால் 80% மாரடைப்பு மற்றும் பக்கவாதங்கள் வராமல் தடுக்க முடியும்” என்கின்றனர் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ நிபுணர்கள்.

உலக இதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய மருத்துவ நிபுணர்கள், இதயத்தையும் இரத்த நாளங்களையும் பாதிக்கிற நோய்களின் தொகுப்பான இதய நாள நோய்களே சமீப ஆண்டுகளில் மிகப்பெரிய எண்ணிக்கையில் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகின்றன என்று சுட்டிக்காட்டினர். ஒவ்வொரு ஆண்டும் இந்நோய்களால் 18 மில்லியன் நபர்கள் உலகளவில் இறக்கின்றனர்; இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய 5 மில்லியன் என்ற அளவில் இந்த உயிரிழப்பு இருக்கிறது.

மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இதயவியல் துறையின் தலைவர் டாக்டர் N கணேசன் பேசுகையில், “இந்நோய்க்கான மிக முக்கிய ஆனால் மாற்றக்கூடிய இடர்காரணிகளுள் ஒன்றாக கடுமையான மற்றும் நாட்பட்ட மனஅழுத்தம் இருக்கிறது. கடும் போட்டி மற்றும் காலக்கெடுவை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஆகியவற்றின் காரணமாக இளவயது நபர்களுக்கு தொடர்ந்து அளவுக்கு அதிகமான மன அழுத்தம் ஏற்படுகிறது. இதய தமனிகளின் உட்புற படலங்களை மாற்றி, அழற்சியையும், வீக்கத்தையும் மன அழுத்தம் விளைவிக்கிறது. இந்த மாற்றங்கள் இரத்தக்கட்டிகள் உருவாவதை ஏதுவாக்கி மாரடைப்புகளை விளைவிக்கக்கூடும். மன அழுத்தத்தோடு சேர்த்து இன்றைய இளைஞர்கள் குறைவான நேரமே தூங்குகின்றனர்; நள்ளிரவு வரை அவர்கள் பொதுவாக விழித்திருக்கின்றனர்; மனதை ரிலாக்ஸாக வைப்பதற்கு அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. அடிக்கடி துரித உணவகங்களில் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதும் அவர்களது பழக்கமாக மாறியிருக்கிறது. மேலும், இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகளவில் புகைப்பிடிப்பவர்களில் 12% நபர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். தொழில்துறையில் பணியாற்றுவதால் உடல்சார்ந்த உழைப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. மேற்குறிப்பிடப்பட்ட காரணிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, இதய நோய்களுக்கு ஆளாவதற்கான இடர்வாய்ப்பை இந்திய இளம் தலைமுறையினரிடம் அதிகரித்திருக்கின்றன,” என்று கூறினார்.

“மனஅழுத்தம் என்பது பொதுவானது மற்றும் தவிர்க்க முடியாதது என்பது உண்மையே; எனினும் இந்த அழுத்தத்தை நமது உடல் எப்படி ஏற்கிறது மற்றும் அதற்கு நாம் எப்படி பதில்வினையாற்ற வேண்டும் என்பதை நாம் அறிந்திருப்பது அவசியம். அழுத்தம் தரும் சூழ்நிலைகளிலிருந்து விலகி இருப்பதற்கு நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். எப்படி ரிலாக்ஸ் செய்வது என்று அறிந்துகொள்ளுங்கள். அது இசையை கேட்பதாகவோ, தோட்ட வேலையாகவோ அல்லது மகிழ்ச்சி தரும் ஒரு ஹாபியை செய்வதாகவோ அது இருக்கலாம். யோகா பயிற்சியும் கூட மனதை தளர்வாக்க உதவக்கூடும். நடப்பதும் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். ஜிம்மிற்கு சென்று பாடிபில்டிங் செயல்பாட்டில் ஈடுபடுவது தசைகளை வலுப்படுத்த உதவும்; ஓட்டப்பயிற்சியும், ஜாக்கிங்-ம் ஒருவரின் உடல் உறுதியையும், தாங்கு திறனையும் அதிகரிக்கலாம். ஆனால், இதயத்தின் ஆரோக்கியத்தை இவைகளெல்லாம் கண்டிப்பாக அதிகரிக்கும் என்று கருதக்கூடாது; ஆனால் ஒவ்வொரு நாளும் சுமார் 45 நிமிடங்கள் என்ற அளவில் ஒரு வாரத்தில் 5 நாட்கள் சுறுசுறுப்பாக நடப்பது, மாரடைப்புகளுக்கான இடர்வாய்ப்பை 20% வரை குறைக்கக்கூடும்,” என்று மன அழுத்த மேலாண்மையின் அத்தியாவசியத்தை டாக்டர் கணேசன் வலியுறுத்தினார்.

இதய மற்றும் இரத்தநாள அறுவை சிகிச்சைத் துறையின் தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் ஆர் எம் கிருஷ்ணன் கூறியதாவது: “மரபணு ரீதியாகவே இதயநோய்கள் பாதிப்புக்கு ஆளாகுபவர்களாக இந்தியர்கள் இருக்கின்றனர்; ஆகவே பிற இடங்களிலுள்ள மக்களைவிட மாரடைப்பு ஏற்படும் அதிக இடர்வாய்ப்பு இந்தியர்களுக்கு இருக்கிறது. ஒவ்வொரு இந்தியருமே மாரடைப்புக்கு ஆளாகக்கூடியவராகவே இருக்கிறார். ஒரு ஐரோப்பியரைவிட மூன்று மடங்கும் மற்றும் ஒரு சீனரை விட ஆறு மடங்கும் மற்றும் ஒரு ஜப்பானியரைவிட இருபது மடங்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளவராக ஒரு சராசரி இந்தியர் இருக்கிறார். இது மட்டுமின்றி அதிவேக, பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் மாசு நிறைந்த சூழல் ஆகியவை இந்த நிலைமையை இன்னும் மோசமாக்கி வருகிறது. காற்று மற்றும் ஒலியினால் ஏற்படும் மாசு கூட தமனிகளில் அழற்சியை ஏற்படுத்தக்கூடியவை.”

“காபி அல்லது தேனீர் மற்றும் சமோசா சாப்பிடுவதற்காக வெளியில் செல்வது என்பது பிரேக் எடுப்பதற்கான மக்களின் மிகவும் பிடித்தமான வழிமுறையாக இருப்பது உண்மையே. ஆனால், இத்தகைய உணவுப்பொருட்கள் ஆரோக்கியத்திற்கு உகந்தவை அல்ல. நாம் உட்கொள்ளும் 75% நொறுக்குத்தீனிகள் மற்றும் சிற்றுண்டிகளில் ‘டிரான்ஸ் ஃபேட்’ எனப்படும் தீங்கு விளைவிக்கும் கொழுப்பு இருக்கிறது. தேனீருக்கான இடைவேளையை சிறிய உடற்பயிற்சிகளுக்கான இடைவேளையாக மாற்றிக் கொள்ளலாம். உடற்பயிற்சிகள் வயது முதிர்ந்த நபர்களுக்கு மட்டுமன்றி, குழந்தைகளுக்கும் இளவயது நபர்களுக்கும் முக்கியமானது. அதிக உடல்எடை / உடற்பருமன் கொண்ட நபர்கள், கொழுப்பு மற்றும் சர்க்கரை அடங்கிய உணவுகளிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் கலோரிகளின் அளவை கண்டிப்பாக குறைக்க வேண்டும். நாள் முழுவதும் போதுமான அளவு நீர் திரவங்களை அருந்தி நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு குறைவாக உள்ள உணவுகள், முழு தானியங்கள், பதப்படுத்தப்படாத புதிதாக சமைத்த உணவுகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய உணவுமுறையை நாம் கொண்டிருப்பது அவசியம்,” என்று டாக்டர். ஆர். எம். கிருஷ்ணன் மேலும் கூறினார்.
மருத்துவப் பரிசோதனைகளின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்திய இதய மயக்கவியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் எஸ் குமார் கூறியதாவது: “ஏறக்குறைய 25% இதயநோய்கள் எந்த அறிகுறிகளும் காட்டுவதில்லை. சுமார் 30-40% இரத்தநாள அடைப்பு இருந்தாலும் கூட அது மாரடைப்பை விளைவிக்கக்கூடும். சுறுசுறுப்பாக நடைபயிற்சி செய்யும் போது ஏற்படும் மார்பில் அசவுகரியம் அல்லது இடது கையில் வலி ஆகியவை இதய நோய்களின் அறிகுறிகளாக இருக்கக்கூடும் என்ற போதிலும், அடைப்பு கடுமையாக இருக்கும் போது கூட சிலருக்கு எந்த அறிகுறியும் வெளிப்படுவதில்லை. ஆகவே, மருத்துவ பரிசோதனைகள் முக்கியமானவை. நமது இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை ஆகியவற்றின் அளவு என்னவென்று நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். குடும்பத்தில் இதய நோய்களின் வரலாறு, நீரிழிவு, புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் அதிக இரத்த அழுத்தம் ஆகியவை இருக்கும் நபர்களுக்கு குறித்த சமயங்களில் பரிசோதனைகள் செய்யப்படுவது கண்டிப்பாக அவசியம். ஒரு நபருக்கு 20 வயது ஆகும்போது கண்டிப்பாக இரத்த பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். உடற்பயிற்சி பரிசோதனைகள் 25 வயதிலும், 30 வயதிலிருந்து ஆண்டுக்கு ஒரு முறை உடற்பரிசோதனை மற்றும் இரத்த கொலஸ்ட்ரால் பரிசோதனைகள் செய்துகொள்வது அவசியம். 35 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. மேற்குறிப்பிடப்பட்ட ஆய்வக பரிசோதனைகள், உடற்பரிசோதனைகள், மருத்துவ மற்றும் குடும்ப வரலாறு ஆய்வு மற்றும் தனிநபருக்கான இடர்காரணிகள் மீதான பரிசீலனை ஆகியவை, உரிய நேரத்திற்குள் சிகிச்சை மேற்கொள்வதற்கு எங்களுக்கு உதவும்.”

மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த டாக்டர். பி. கண்ணன் – மருத்துவ நிர்வாகி, டாக்டர். ஆர். சிவக்குமார் – முதுநிலை இதயவியல் நிபுணர், டாக்டர். எஸ். செல்வமணி – முதுநிலை இதயவியல் நிபுணர், டாக்டர். ஜெயபாண்டியன் – முதுநிலை இதயவியல் நிபுணர் மற்றும் டாக்டர் எம் சம்பத் குமார் – முதுநிலை இதயவியல் நிபுணர் ஆகியோர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற பிற முக்கிய நிபுணர்களாவர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ பின்னணி…

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ, அறிமுகச் சுற்றில் தனது பின்னணியைப் பகிர்ந்து கொண்டார்: *வயது …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES