பிரிட்டனை பிரதமராக ரிஷி சுனக் நல்லபடி ஆளட்டும், வாழ்த்துகள்!
இந்த நேரத்தில் மறைமுகமாக எம்பிக்களால் தேர்ந்தெடுக்கப்படும், பிரதமர் பதவியில் அமரும் இந்திய, இந்துப் பின்னணியைக் கொண்ட ரிஷி சுனக்கை மட்டும் அல்ல; நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் லண்டன் மேயர் பதவிக்கும் ஒரு வெளிநாட்டு பூர்வீகர் – பாகிஸ்தானைப் பின்புலமாகக் கொண்ட முஸ்லிம் சாதிக் கானை – பிரிட்டிஷார் தேர்ந்தெடுத்திருக்கின்றனர் என்பதையும் நினைவில் கொள்வோம்.
இந்தியர்களுக்கு இதில் உள்ள சேதி என்ன?
வெளியிலிருந்து வருவோரையும்கூட ஒரு சமூகம் எந்த அளவுக்கு அரவணைக்கிறது, மதிப்பளிக்கிறது, பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதுதான்!
இன்று ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக ஆவதையும், நேற்று கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபர் ஆனதையும் கொண்டாடும் அதே வாய்கள்தான் கடந்த காலத்தில் சோனியா இந்திய பிரதமர் ஆவதை எதிர்த்து சுதேசி எதிர் விதேசி நியாயம் பேசிப் புறந்தள்ளின என்பதை மறக்க முடியுமா? இது தற்செயலா அல்லது இந்தியர்களுக்கே உரிய இரட்டை நாக்கின் இயல்பா?
அட, வெளிநாட்டுப் பின்னணி கொண்ட சோனியா இருக்கட்டும், இந்தியாவுக்குள்ளேயே பிறந்த முஸ்லிம்கள், தலித்துகள் என்றைக்கு இந்த நாட்டில் பிரதமராக முடியும்? இந்தி தெரிந்திராத ஒரு காஷ்மீரியோ, சிக்கிமியரோ பிரதமர் பதவியைக் கற்பனை செய்ய முடியுமா?
பெருமை கொள்ள ஏதும் இல்லை… 75 ஆண்டு கால சுதந்திரத்தில், ஒரு ஜனநாயக நாட்டின் சொந்த மக்கள் இடையே இன்னமும் இவ்வளவு பாகுபாட்டையும் ஏற்றத்தாழ்வையும் வைத்திருக்கும் நாம் இதுகுறித்து வெட்கப்பட வேண்டும்.
நமக்கு நாமே சுய பரிசீலனைக்குள்ளாக்கிக்கொள்ள வேண்டும்.
– சமஸ் (தமிழ் எழுத்தாளர், பத்திரிகையாளர்)