பக்கவாதத்திற்கு அடுத்த நொடியிலேயே சிகிச்சை தேவை என அப்போலோ மருத்துவமனை விழிப்புணர்வு கருத்தரங்கில் டாக்டர்கள் கூறியுள்ளனர்
பக்கவாதம் ஏற்பட்ட உடனேயே சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை உள்ளதாக பிரபல மருத்துவர்கள் வலியுறுத்தினர். பக்கவாதம் ஏற்பட்ட பிறகு ஒவ்வொரு நிமிடத்திலும் சுமார் 19 லட்சம் நரம்புகளும், 10 நிமிடத்திற்குள் சுமார் 2 கோடி நரம்புகளும் செயலிழக்கும் அபாயம் உள்ளதால் பக்கவாதத்திற்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பொதுமக்கள் உணர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மதுரை அப்போலோ மருத்துவமனையில் “பக்கவாதம் & முடக்குவாதம் : கண்டறிதல், சிகிச்சை மற்றும் தடுப்புக்கான விழிப்புணர்வு” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
இந்தக் கருத்தரங்கில் டாக்டர்கள் மீனாட்சி சுந்தரம் – மூத்த நரம்பியல் நிபுணர், எஸ்.என்.கார்த்திக், சுரேஷ், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஷ்யாம், டாக்டர் கெவின் ஜோசப், நரம்பியல் நிபுணர் சுந்தர் ராஜன், கதிரியக்க நிபுணர் ஜான் ராபர்ட், எமர்ஜென்சி பிரிவு மருத்துவர் ஜூடு வினோத் அப்போலோ மருத்துவமனை மதுரைப் பிரிவின் சிஓஓ நீலகண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பக்கவாதம் மற்றும் முடக்குவாதம் குறித்த முக்கிய தகவல்களை விளக்கிப் பேசினர்.
வயது முதிர்வு மற்றும் பல்வேறு காரணங்களால் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதாலும், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க முடியாததாலும், கெட்ட கொழுப்பின் அளவு இரத்தத்தில் அதிகரிப்பதாலும், புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கவழக்கங்களினாலும், பரம்பரைக் காரணிகளாலும் பக்கவாதம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
இந்நோயில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு வரும் இஸ்கீமிக் (ischemic) ஸ்ட்ரோக். 85 விழுக்காடு நபர்களுக்கு இதன் காரணமாகவே பக்கவாதம் ஏற்படுகிறது. இரண்டாவது இரத்தக்குழாய்களில் வெடிப்பு ஏற்படுவதால் வரும் ஹெமரேஜிக் (hemorrhagic) ஸ்ட்ரோக்.
எம்ஆர்ஐ ஸ்கேன் அல்லது சிடி ஸ்கேன் பரிசோதனைகள் மூலமாக எந்த அளவுக்கு பக்கவாதத்தின் பாதிப்பு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பக்கவாதம் ஏற்பட்டு அதிகபட்சமாக 3 அல்லது 41/2 மணி நேரத்திற்குள் இந்நோய்க்குச் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைகளை அணுகுபவர்களுக்குத் த்ராம்போலைசிஸ் என்ற ஊசி மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. டினக்ட்டிப்ளேஸ், அல்டிப்ளேஸ் என்று இருவகை மருந்துகள் இத்தருணத்தில் உபயோகப்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்தனர்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது மதுரை அப்போலோ மருத்துவமனை சிஓஓ நீலக்கண்ணன், டாக்டர் பிரவீண் ராஜன், JDMS அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மார்க்கெட்டிங் பிரிவு பொதுமேலாளர் கே .மணிகண்டன், நிர்வாக பொதுமேலாளர் டாக்டர் நிகில் திவாரி ஆகியோர் உடனிருந்தனர்.