மதுரையில் ரயில் தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மதுரை,ஆக.26-
மதுரை ரயில்வே நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் பரிதாபமாக பலியாகிநர் மேலும் ஆறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தீ விபத்து நடைபெற்ற இடத்தை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி உதயகுமார் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும் விபத்து ஏற்பட்டதிற்கான காரணம் மற்றும் விபத்தில் காயமடைந்த பயணிகள் விபரங்கள் குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் விசாரித்தார்.
இதனைத் தொடர்ந்து ரயில் தீ விபத்தில் காயமடைந்து ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளிடம் ஆறுதல் தெரிவித்ததோடு அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் சிகிச்சை பெறுபவர்களுக்கு பிரட்,பழங்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவருமான ஆர்பி உதயகுமார் கூறுகையில்:- மதுரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் பலி ஆகியுள்ளது மிகவும் வேதனையும் வருத்தமும் அளிக்க கூடிய நிகழ்வாக உள்ளது. கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் உத்தரவின் பேரில் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்ததோடு விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தேன்.
ரயில் தீ விபத்தில் பலியான ஒன்பது பேருக்கு கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் சார்பிலும் அதிமுக சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரயில்வே துறைக்கென்று தனியாக பேரிடர் மேலாண்மை குழு இருக்கிறது. இந்த ரயில் தீ விபத்துக்கு முக்கிய காரணம் கேஸ் சிலிண்டர் கொண்டு வந்தது தான். இந்த கேஸ் சிலிண்டர்களை எப்படி ரயில்வே போலிஸார் அனுமதித்தார்கள் என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. இனி வரும் காலங்களில் இது போன்ற விபத்துகள் ஏற்படாதவாறு ரயில்வே துறை அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்…