பாஜகவின் இளைஞரணியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், இளைஞரணியின் சமூக ஊடக பொறுப்பாளராகவும் இருப்பவர் பிரவீன் ராஜ். இவர் ‘சங்கி பிர்ன்ஸ்’ என்ற பெயரில் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகிறார்.
இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோரை ஆபசமாக சித்தரித்து தனது சமூக ஊடகத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பலர் மத்தியிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில், கரூர் மாவட்ட காங்கிரஸ் தரப்பில் இருந்து போலிசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் போலீசார், பாஜக நிர்வாகி பிரவீன் ராஜை அதிரடியாக கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி தனது சமூக வலைதளத்தில் “கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கொடுத்த புகாரில் , ராகுல்காந்தி,பிரியங்கா காந்தி அவர்களின் வீடியோவை எடிட் செய்து ஆபாசமாக வெளியிட்டு, அறுவெறுக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்த பாஜகவின் ஐ.டி விங் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாக ஒருவரை விமர்சிக்கலாம். ஆனால், ஒரு அண்ணன், தங்கையை அரசியலில் ஈடுபடுகிறார்கள், பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள் என்பதாலேயே அறுவெறுக்கத்தக்க வகையில் பதிவிடுவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாஜகவின் ஆபாச, வெறுப்பு அரசியல் தமிழ் சமூகத்திற்கே மிகப்பெரிய அவமானம்.
இன்று பிரியங்கா காந்தி.. நாளை நமது வீட்டுப் பெண்கள். இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை ஆபாசமாக, அறுவெறுக்கத்தக்க வகையில் விமர்சிப்பதை காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்த்துக்கொண்டிராது. இனிமேலாவது பாஜகவினர் இதுபோன்ற ஆபாசமான, அறுவெறுக்கத்தக்க அரசியலை கைவிட்டு தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.” என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.