பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு
தங்க கவசம் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் நேற்று ஓப்படைக்கப்பட்டது
மதுரை,அக்.26-
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ந் தேதி குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம்.
இதையொட்டி தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பசும்பொன் தேவருக்கு ரூ.84 கோடி ரூபாய் மதிப்பில் 78 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பாக வழங்கினார். விழா முடிந்த பிறகு இந்த தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள ஒரு வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
இதனை வருடந்தோறும் அ.தி.மு.க பொருளாளர் மூலம் பெற்று தேவர் ஜெயந்தி விழாவின் போது பசும்பொன்னுக்கு கொண்டு செல்லப்படும். அதன்படி அண்ணா தி.மு.க. பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அதனை பெற்று தேவர் குருபூஜை விழாக் குழுவினரிடம் வழங்கி வந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணியினரிடையே ஏற்பட்ட பிரிவு காரணமாக தங்க கவசத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி பசும்பொன் தேவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. ஐகோர்ட் உத்தரவின்படி
மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து தங்க கவசம் எடுத்து அ.தி.மு.க. பொருளாளர்
திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்ககவசம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு எடுத்து செல்லப்பட்டது.
தேவர் ஜெயந்தி விழா முடிந்த பிறகு மீண்டும் இதே வங்கியில் தங்க கவசம் ஒப்படைக்கப்பட்டு லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அதிமுக துணை பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதன், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், மணிகண்டன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ, மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மாவட்ட துணைச்செயலாளர் வில்லாபுரம் ராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மருத்துவரணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் சரவணன், வி.பி.ஆர்.செல்வகுமார், தலைமை கழக பேச்சாளர் எம்.எஸ்.கே.மல்லன், இலக்கிய அணி மாநில இணைச் செயலாளர் ஆர்.கே.ரமேஷ், 85 வது வட்டக்கழக செயலாளர் ஜெயக்குமார், டாக்டர் சின்னச்சாமி, மாஸ்.மணி உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.