சென்னை: சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிட்டாலாண்ட்(Capitaland) குழுமம் 50,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் அமைத்துள்ள சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை (International Tech Park) அமைத்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பூங்காவை இன்று திறந்து வைத்தார். ஆட்டோமொபைல் துறையில் டாப்பில் இருக்கும் தமிழ்நாடு தற்போது ஐடி துறையிலும் பாய்ச்சலை நிகழ்த்த தொடங்கி உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (31.10.2023) சென்னை, பல்லாவரம் ரேடியல் சாலையில், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிட்டாலாண்ட் (Capitaland) குழுமத்தின் துணை நிறுவனமான ரேடியல் ஐடி பார்க் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (Radial IT Park Private Limited), 50,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைத்துவரும் தொழில்நுட்ப பூங்காவில், முதற்கட்டமாக 1.3 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைத்துள்ள சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை (International Tech Park) திறந்து வைத்தார்.
அனைவரையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சி என்ற தமிழ்நாடு அரசின் கொள்கையின் அடிப்படையில், கிராமப்புறங்களை சார்ந்த, படித்த இளைஞர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டங்களுக்கு அருகிலேயே அதிக எண்ணிக்கையிலான உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம், திருப்பூர், வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் சேலம் ஆகிய இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் 50,000 சதுர அடி முதல் 1,00,000 சதுர அடி பரப்புள்ளதாக, மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், உதகமண்டலத்தில் புதுமையான அம்சங்களுடன் ஒரு மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கையும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
யூடர்ன் மேம்பாலம்.. சென்னை டைட்டில் பார்க், இந்திரா நகர் மக்களே சந்தோஷமான செய்தி வந்தாச்சு
கேப்பிட்டாலாண்ட்(Capltaland) குழுமம்: ஆசியாவின் மிகப்பெரிய வணிக குழுமங்களில் ஒன்றான கேப்பிட்டாலாண்ட் குழுமம், பல நாடுகளில், முப்பதுக்கும் மேற்பட்ட சில்லறை வணிகம், அலுவலக வளாகங்கள், தங்குமிடங்கள், வணிகப் பூங்காக்கள், போக்குவரத்து மேலாண்மை மற்றும் தரவு மையங்களை நிறுவியுள்ளது.
முன்னதாக அசென்டாஸ் (Ascendas) என அறியப்பட்ட கேப்பிட்டாலாண்ட், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில் முதல் தனியார் தகவல் தொழில்நுட்ப வணிகப் பூங்காவை சென்னையில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இக்குழுமம் சென்னை தரமணியில் சர்வதேச தொழில்நுட்ப பூங்கா, செங்கல்பட்டு, மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில் சைபர்வேல் (CyberVale) மற்றும் சென்னை, பல்லாவரம் ரேடியல் சாலையில் இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட சர்வதேச தொழில்நுட்ப பூங்கா என மூன்று வணிக பூங்காக்களைக் கொண்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன், மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜ, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. இ. கருணாநிதி, திரு.எஸ்.ஆர். ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் திரு. வி. அருண்ராய், இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஆ.ர. ராகுல்நாத், இ.ஆ.ப., கேப்பிட்டாலேண்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் தலைவர் திரு.மிகுவல் கோ, கேப்பிட்டாலேண்ட் இன்வெஸ்ட்மென்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் திரு. சஞ்சீவ் தாஸ்குப்தா, இந்திய வணிகப் பூங்காக்கள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் திரு. கவுரி சங்கர் நாகபூஷணம், சென்னை செயல்பாடுகள் தலைவர் திரு. சி. வேலன், மிட்சுபிஷி எஸ்டேட் நிறுவனத்தின் செயல் அலுவலர் திரு. மாசநோரி இவாசே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.