திருமலை: பிரபல தெலுங்கு, தமிழ் பட நடிகை விஜயசாந்தி. இவர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.
சினிமா துறையில் இருந்து விலகியிருந்த இவர், தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தார். ஆரம்பத்தில் பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சியிலும், அதன்பின்னர் சந்திரசேகரராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சியிலும் அதன்பின்னர் மீண்டும் பாஜக என 3 கட்சிகளுக்கும் அணி தாவி முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். தற்போது பாஜகவில் உள்ளார். இந்நிலையில் தெலங்கானாவில் வரும் 30ம்தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது.
இதில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பாஜக மேலிடத்தை அவர் அணுகியதாக தெரிகிறது. ஆனால் பாஜக மேலிடம் வெளியிட்ட 2 வேட்பாளர் பட்டியல்களில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதனால் விஜயசாந்தி கடும் அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. விஜயசாந்தி, சமூக வலைதளமான எக்ஸ்தள பதிவில் நேற்று முன்தினம் இரவு ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சி நடத்திவரும் குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும். காங்கிரஸ் பக்கம் நின்று தெலங்கானா மக்களை காப்பாற்ற போராட வேண்டும் என காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலர் எனக்கு அழைப்பு விடுக்கின்றனர்.
அதேபோல் மறுபுறம் இந்துத்துவா வாதியாக இருந்து பாஜகவை தெலங்கானாவில் காலூன்ற துணையாக இருக்கவேண்டும் என அக்கட்சியினர் கூறுகின்றனர். உண்மையில் தெலங்கானாவில் நடந்துவரும் கொடுங்கோல் ஆட்சி நிர்வாகத்தை அகற்றவேண்டும். மாநிலத்தை போராடி பெற்ற தெலங்கானா மாநில மக்களுக்கு நன்மை தரும் புதிய அரசு அமையவேண்டும். சினிமாக்களில் மட்டுமே இரட்டை வேடத்தில் என்னால் நடிக்க முடியும். அரசியலில் அதுபோன்று இருக்க முடியாது.
இருகட்சியினரும் அவர்களது கட்சிகளில் நான் இருக்க விரும்புகின்றனர். இருந்தாலும் ‘ஹரஹர மகாதேவா, ஜெய்ஸ்ரீராம், ஜெய் தெலங்கானா’ இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 10 நாட்களில் பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் அணி மாறிவரும் நிலையில் தற்போது விஜயசாந்தியும் காங்கிரசுக்கு தாவ வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.