ஐதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், காங்கிரஸ் கட்சிக்கு முழு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும், ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா அறிவித்துள்ளார்.தெலுங்கானாவில் நவ.,30ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையும், ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சியின் தலைவருமான ஷர்மிளா, சமீபத்தில் சோனியா மற்றும் ராகுலை சந்தித்து, தனது கட்சியை காங்கிரஸோடு இணைக்கும் முயற்சியில் இறங்கினார். இதற்கு காங்கிரசில் சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.இதனால் அக்டோபர் 12ம் தேதி, தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக ஷர்மிளாவின் கட்சி அறிவித்தது. பாளையார் தொகுதியில் போட்டியிடப் போவதாக ஷர்மிளா அறிவித்தார். அவரது தாயார் விஜயம்மா, செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஷர்மிளா தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது என அறிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.