இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் மும்பையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும், செயலாளராக மத்திய மந்திரி அமித் ஷாவின் மகன் ஜெய்ஷாவும், பொருளாளராக அருண்சிங் துமாலும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் கடந்த மாதம் பதவி ஏற்றனர்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி மும்பையில் நடக்கிறது. கூட்டம் தொடர்பான தகவல் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
லோதா கமிட்டியின் பரிந்துரைப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறையில் பெரிய அளவில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. அவற்றில் ஒன்று, மாநில சங்கம் மற்றும் கிரிக்கெட் வாரியத்தில் ஒருவர் ஒரே நேரத்தில் தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவியில் இருந்தால் அடுத்த 3 ஆண்டு இடைவெளி விட வேண்டும் என்பதாகும். இதில் மாற்றம் செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.
அதாவது தலைவர் மற்றும் செயலாளர் மட்டும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் பதவியில் நீடிக்கும் வகையில் திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர். மேலும் தலைமை செயல் அதிகாரிக்கு அதிகாரத்தை குறைத்து, செயலாளருக்கு அதிக அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகள் கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளது. 4-ல் 3 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் இவற்றை நிறைவேற்ற முடியும்.