மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
திருமங்கலம், மேலூர் பாசன கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து திருமங்கலம் பகுதி விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபெல் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில்:- 21/04/2010 அன்று அன்று திருமங்கலம் கால்வாய், கள்ளந்திரி கால்வாய், மேலூர் கால்வாய் மூன்றுக்கும் ஒன்றாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அரசு கெஜட் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ளது.
ஆனால் கள்ளந்திரி கால்வாயில் மட்டும் இருபோகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டு திருமங்கலம் கால்வாய் மேலூர் கால்வாயில் 10 நாள் மட்டும் குடிநீருக்காக தண்ணீர் திறந்து விட்டு உள்ளனர். விவசாயத்திற்காக திறந்து விடவில்லை.
ஏற்கனவே வெளியிட்ட ஆணைப்படி தண்ணீர் திறந்து விடாமல் விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்கத்தில் குடிநீருக்காக தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். நாளை 25ஆம் தேதி தண்ணீரை நிறுத்த உள்ளனர்
இதை நம்பி அனேக விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். நாளை ஷட்டரை அடைக்கும் நிலையில் பயிர்கள் கருக தொடங்கிவிடும்.
ஏற்கனவே வெளியிட்ட கெஜட் படி தண்ணீரை திறந்து விட வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பேசுவதற்காக விவசாயிகள் சென்றிருந்தோம். ஆனால் மாவட்ட ஆட்சியாளர் எங்களை சந்தித்து குறைகளை கேட்க வரவில்லை.
இதனால் திருமங்கலம் பகுதி அனைத்து சங்க விவசாயிகள் அனைவரும் வெளிநடப்பு செய்தோம். ஆனால் நாங்கள் வெளிநடப்பு செய்து வெளியே வந்த பிறகு மாவட்ட ஆட்சியர் கூட்டம் நடந்த அரங்கிற்கு வந்து அங்கிருந்து விவசாயிகளிடம் நான் ஒன்றும் செய்ய முடியாது அரசாங்கம் தான் முடிவு எடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.
இது மிகவும் கண்டிக்கத்தக்கது. வைகையில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் இந்த நேரத்தில் அந்த தண்ணீரை திருமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு கால்வாயில் தொடர்ந்து திறந்து விட்டால் விவசாயமாவது செழிக்கும்.
எனவே திருமங்கலம் பகுதி பாசன கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டு விவசாயிகளை காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறோம். என கூறினார்.