தொடரும் நினைவுகள்:
பள்ளிப் பருவத்தில் பருகிய இனிமை
பாரெங்கும் சுற்றினாலும் பார்த்திடா இனிமை
பகையில்லா நட்பாய் பரவசமூட்டிய நாட்கள்
பாடமும் பாட்டும் பழகிய நாட்கள்
பகிர்ந்து உண்டு பசியும் போக்கினோம்
பாகுபாடின்றி ஒற்றுமையாய் பறந்து திரிந்தோம்
அன்பில் பொருள் கொண்டது அவ்வாழ்வு
பொருளில் அன்பு கொண்டதே இவ்வாழ்வு
மீண்டும் கிட்டாதோ நம் இளமைப்பருவம்
என்றும் நீங்கா இனிய பருவம்
உழைப்பே உயர்வு:
உழைப்பே மனதையும்
உடலையும் நிலையாக்கும்
உழைக்கும் எண்ணமே
உனை உயர்வாக்கும்
முயற்சிகளே இவ்வாழ்விற்கு
முத்தான வாய்ப்பாகும்
பிழைகளைக் களைந்தால்
உண்டு உயர்வு
காதல்:
கட்டழகில் காதல் கட்டிலில் முடிகிறது
கருத்தில் காதல் காலமெல்லாம் தொடர்கிறது
வார்த்தைக் காதல் வானவில்லாய் போகிறது
வரமான காதல் வாழ்வைக் கடக்கிறது
ஆசையில் காதல் ஆயிரத்தில் ஒன்றாகிறது
அன்பான காதல் ஆத்மாவைக் காண்கிறது
இச்சைக் காதல் இலையுதிர் காடாகிறது
இதயத்தில் காதல் இலக்கியம் ஆகிறது
நவயுகத்தில் காதல் நாகரிகம் மறக்கிறது
நல்லோர் காதல் நன்மை படைக்கிறது
நிபந்தனைக் காதல் நிர்கதியாய் நிற்கிறது
நிலையான காதல் நித்தமும் இனிக்கிறது
கண்ணே என் கண்மணியே:
உன் நெற்றித் திலகத்தில்
நெக்குறுகிப் போனேனே!
உன் வளைந்த புருவத்தில்
வழுக்கிதான் போனேனே!
உன் மான்விழி மயக்கத்தில்
மயங்கிப் போனேனே!
உன் சுவாசக்காற்றின் சுகந்தத்தில்
சுகித்துப் போனேனே!
உன் தேன்மதுர அதிரத்தில்
தேனருந்திப் போனேனே!
உன் பாடும் குயிலிசையில்
பரவசமாகிப் போனேனே!
உன் வெண்சங்கு கழுத்தில்
வேந்துதான் போனேனே!
உன் ஆதார தோள்களில்
அடிசாய்ந்துதான் போனேனே!
உன் அசைந்தாடும் இடையில்
அகப்பட்டுப் போனேனே!
உன் கார்மேகக் கூந்தலில்
கரைந்துதான் போனேனே!
உன் நாட்டிய நடையழகில்
நலிந்துதான் போனேனே!
உன் தாமரை மலரடியில்
தடுமாறிப் போனேனே!
கண்ணே என் கண்மணியே
உனைக் கண்டதும் உன்னிடத்தில்
ஆழ்ந்துதான் போனேனே!
அன்பே:
நிலையற்ற உலகில்
நிறமாறிப் போகிறது
நிந்தன் மொழியும்
துள்ளித் திரிந்தேனே
துணிவாய் வந்தேனே
துணை என்றானே
கண்ணில் காதல் சொன்னாய்
கவனிப்பில் காதல் கொண்டாய்
களைத்ததும் காற்றாகச் சென்றாய்
என்னில் வானமாய் நீ
உன்னில் வானவில்லா நான்
நினைவாக நீயே இருக்க
நிர்கதியாய் நானும் நிற்க
மீண்டும் வருமோ வசந்தம்
மீளா வகையில் வருத்தம்
நிகரில்லா அன்புடன் நான்
நித்தமும் இறையிடம் கேட்கிறேன்
நீயேனும் நிறைவாய் வாழ..
கோபாலகிருஷ்ணன்.த
ஈரோடை மாவட்டம்.