முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் இளைஞர்களைக் கவர்ந்த ஜனாதிபதியாக திகழ்ந்ததோடு, இந்தியா வல்லரசாக வேண்டுமென்ற கனவையும் கொண்டிருந்தார். அவர் கண்ட பல கனவுகளில் ஒன்று பசுமையான இந்தியாவை உருவாக்குவது!
உலக வெப்பமயமாதலுக்கு எதிரான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தவும்,அப்துல்கலாம் அவர்களின் கனவை நனவாக்கும் விதமாக, அவரது அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் அவர்களின் ஆலோசனைப்படி தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தின் சார்பாக அதன் மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மரக்கன்றுகளை வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகே உள்ள கேரன் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இரண்டாயிரம் மரக்கன்றுகளை ஆபேல் மூர்த்தி வழங்கினார்.
இந்நிகழ்வில் சமூகசேவகர் செல்லப்பாண்டி மற்றும் பள்ளியின் முதல்வர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாணவர்களிடையே ஆபேல் மூர்த்தி பேசியதாவது :- புவி வெப்பமாவதை தடுக்க முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஐயா அவர்கள் மரக்கன்றுகளை நட வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். அவர் கனவை நனவாக்கும் விதமாக அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக மாணவர்களிடம் மரம் நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று இரண்டாயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
அடுத்த கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று மரக்கன்றுகளை வழங்க உள்ளோம். இந்த மரக்கன்றுகளை பெற்றுச்செல்லும் மாணவர்கள் அதை நட்டு வைத்து தினமும் இந்த மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வாட விடாமல் பாதுகாப்புடன் வளர்க்க வேண்டும். மரத்தை நேசியுங்கள். மரம் உங்களை நேசிக்கும்.
மரங்களை நட்டு வைத்தால் மழை பெறுவது மட்டுமில்லாமல் புவி வெப்பமாவதையும் தடுக்கலாம். எனவே மரங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு அவசியம் என பேசினார்.