தனது சொந்த கட்சிக்காககவும், கட்சியின் அதிகாரத்துவத்தினை செயல்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் மோடி.
அவ்வாறு அவர் தலைமையில், 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, 2018 முதல் அமலுக்க வந்த தேர்தல் பத்திரம் முறை, சட்டப்படி எவ்வாறு ஊழல் செய்வது என்பதை உலக அரங்கிற்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.
2014 ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட எண்ணற்ற நடவடிக்கைகளால், ஏழை மக்களிடமிருந்து பிடுங்கப்பட்ட பணங்கள், அதிகார வகுப்பினருக்கு வாரி வழங்கப்படுகிறது.
அவ்வாறு வழங்குவதன் வழி, ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.விற்கும் அளவு கடந்த நிதி பரிமாற்றங்கள் நிகழும் சூழல் உருவானது.
எனினும், அது கையூட்டாக அடையாளப்பட கூடாது என்பதற்காக, தன் கட்சி நிதிக்காக, தேர்தல் பத்திர முறை என்ற திட்டத்தை முன்மொழிந்து, யார் வேண்டுமானாலும், எவ்வளவு தொகை வேண்டுமானாலும், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம் என்ற நிலையை உருவாக்கியது பா.ஜ.க.
இத்திட்டம் அறிவித்த போதே, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், அதனை வழக்கம் போல் தட்டிக்கழித்தது பா.ஜ.க.
இந்நிலையில், இச்சிக்கல் உச்சநீதிமன்றம் வரை சென்று, தேர்தல் பத்திர முறை மிகவும் கொடியது என்ற தீர்ப்புடன் அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு, நன்கொடை வழங்கியவர்கள் குறித்த தகவலையும் வெளியிட உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து, தேர்தல் பத்திர கணக்கு வழக்குகளை நிர்வகித்து வந்த SBI-ம் பல தகவல்களை வெளியிட்டு, இந்தியாவின் அரசியல் கட்சிகளிலேயே பா.ஜ.க தான் அதிகபட்சமாக ரூ. 6000 கோடிக்கும் அதிகமான நிதிபெற்றது அம்பலமானது.
இது இந்திய அளவில் பெரும் சர்ச்சையான நிலையில், அந்த சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் வருகிறது.
காரணம், பா.ஜ.க பெற்ற தொகையாக கணக்கில் வரப்பெற்ற தொகையின் அளவு, உண்மையில் குறைவானதே. கணக்கில் வராத பெரும் தொகையும் பா.ஜ.க.வின் வங்கிகளுக்கு சென்றுள்ளது என்பது தான்.
அதன் ஒரு பகுதியாகவே, அண்மையில் கோடக் மகேந்திரா வங்கி சிக்கல் எழுந்துள்ளது.
கோடக் வங்கிக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையில், கோடக் நிறுவனரின் பங்கு விழுக்காடு குறித்து பல ஆண்டுகளாக நடந்து வந்த சட்ட சிக்கலை, பா.ஜ.க உள்ளுக்குள் பூந்து சரி செய்து, அதற்கு ஒரு பெரும் தொகையை, தேர்தல் பத்திரம் மூலம் கையூட்டாக பெற்றது தெரியவந்து,
பா.ஜ.க கையூட்டாக பெற்ற தொகை ரூ. 60 கோடி என்றும் SBI தகவலின் படி வெளியானது. இந்நிலையில் அந்த கையூட்டு ரூ. 60 கோடி இல்லை, ரூ, 131 கோடி என்ற செய்தி கசிந்து மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதன் வழி, கோடக் மகேந்திரா குழுமத்தின் நிறுவனர் உதய் கோடக், ஆசியாவின் செல்வமிக்க வங்கி உரிமையாளராக வளர்ச்சியடைய தேர்தல் பத்திரமும், பத்திரத்தின் வழி பா.ஜ.க பெற்ற தொகையும் தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.
இவ்வாறு மறைமுகமாக பா.ஜ.க.வும், அவர்களுக்கு கையூட்டு தருபவர்களும் பொருளியல் வளர்ச்சியடைய, மக்களின் வாக்குகளினால் பெற்ற அதிகாரம் இரையாக்கப்படுவது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.