ரமலான் பண்டிகையை யொட்டி மதுரை அரசரடியில் இறையியல் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
இஸ்லாமியர்கள் மத்தியில் ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான் பெருநாள் வரும் இம்மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.
நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் குர்ஆன் உலகிற்கு இறைவனால் வழங்கப்பட்டதும் இந்த மாதம் என்பதால், மாதம் முழுவதும் 30 நாள்கள் நோன்பு மேற்கொண்டு ரமலான் திருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இன்று வியாழக்கிழமை நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் பெருநாளை உற்சாகத்துடன் கொண்டாடினர்.
மதுரையில் பள்ளிவாசல்களில் அதிகாலையிலிருந்து பெருநாளை முன்னிட்டு தொழுகைகள் நடைபெற்றன. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்று ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.
மதுரை அரசரடியில் உள்ள இறையியல் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் ஆண்கள்,பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொழுகை முடிந்த பின்னர் கட்டித்தழுவி தங்களது ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட தலைவர் எஸ்.ஷேக் இப்ராஹிம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் முகம்மது கௌஸ், மாவட்ட செயலாளர் ஆம்புலன்ஸ் சேக், ஐ.பி.பி மாவட்ட செயலாளர் அர்சத்புகாரி, மாவட்ட பொருளாளர் அப்துல்ஹமீது உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.