கைகூப்பித்தானே கும்பிட்டோம்…தொழுதோம்…
கை கால் முகம் கழுவிதானே இல்லம் நுழைந்தோம்
ஆடி, தீபாவளிதானே
அசைவம் உட்கொண்டோம்
பயணம் செல்வோருக்கும்
கட்டுச்சோறு தவிர்த்து கலப்புக்கடை உணவு கலாச்சாரத்தில் இல்லையே!
பயிறு பொறி காராச்சேவு போன்றவற்றைத் தவிற பலகாரம் இல்லையே!
இட்டிலி தோசை கூட ஏகாதசி கார்த்திகைக்குத் தானே!
அரிசிச் சோறு அரிதாய் இருந்தது
மண்வீடாயினும் ஆரோக்கியமாய் இருந்தது
அம்மையும் காலராவையும் தவிற வேறு நோய் ஏது?
அஞ்சரைப்பெட்டி இல்லாத வீடேது?
மா,வேம்பு தோரணம் கட்டி
மக்கள் கூடும் விழா மஞ்சள் நீராட்டோடு முடிந்தது நோய் தொற்றை தவிர்க்கத்தானே…..
வாரம் இருமுறை பூசி மெழுகாத அடுப்பாங்கரை ஏது?
வெள்ளியும் செவ்வாயும் கோமியம் தெளிக்காமல் விடியல் ஏது?
கொடியேற்றம் துவங்கியதும் திருவிழா ஊரில் கவுச்சி இல்லை பால்நுகர்ச்சி இல்லை
ஆதலால் நோய் தொற்று இல்லை
மரபைத் தொலைத்தோம்
மரணத்தை அறுவடை செய்தோம்
என்றைக்கு அடிக்கடி அசைவம் உட்கொண்டோமோ?
என்றைக்கு நீராகாரம் மறந்து பேக்கரி சென்றோமா?
என்றைக்கு கலப்புக்கடையில் கண்டதை
தின்றோமோ?
என்றைக்கு ஓரிடத்தில் குவியத் தொடங்கினானோ?
என்றைக்கு பூமியயை ரசாயனத்தால் கொலை செய்தோமோ
பிளாஸ்டிக்கால் பூமியின் தாய்மை அழித்து மலடாக்கினோமோ?
சுயநலம் பெருகி
சுற்றம் சுருங்கியது
விளைவு மனிதகுலம் வீங்கி வெடிக்கிறது
மரபை மீட்போம்
மனிதத்தை காப்போம்
– இளைஞர் குரல்