26-3-2020-வியாழக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் சென்னிமலை அருகே ஈரோடு&திருப்பூர் மாவட்ட எல்லையான நொய்யல் சோதனை சாவடி வழியாக வந்த ஒரு லாரியை சென்னிமலை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
அந்த லாரியை சோதனை செய்த போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது-.
அந்த லாரியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 65 பேர் இருந்தனர். அதுவும் உட்காருவதற்கே இடம் இல்லாமல் ஆடு, மாடுகளைப் போல் அடைபட்டு இருந்தனர்.
அவர்களிடம் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.செல்வராஜ் அவர்கள் விசாரித்த போது-, லாரியில் வந்தவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் சுமார் 20 குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்றும், சமீபத்தில் இவர்கள் கூலி வேலைக்காக கேரள மாநிலம், திருச்சூர் பகுதிக்கு சென்றவர்கள் என தெரியவந்தது.
கொரோனா நோய் பரவுதலை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு போட்ட நிலையில், கேரளாவில் இருந்து இவர்களை அம்மாநில போலீசார் அங்கிருந்து துரத்தியிருக்கின்றனர்.
கேரள போலீசின் கெடுபிடியால் அங்கிருந்து தமிழகம் வருவதற்கு எந்த வாகனமும் இல்லாத நிலையில் திருச்சூரில் இருந்து 25-3-2020 அன்று இரவு கிளம்பி மூட்டை, முடிச்சுக்களுடன் விடிய, விடிய நடந்து 26-3-2020 அன்று அதிகாலை தமிழக எல்லையை அடைந்துள்ளனர்.
தமிழக எல்லையில் 65 பேரையும் தடுத்து நிறுத்தி மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு இவர்களுக்கு எந்த நோயும் இல்லை என்ற முடிவுக்கு வந்த பிறகே இவர்களை தமிழகத்திற்குள் நுழைய போலீசார் அனுமதித்துள்ளனர்.
பின்னர் சோதனை சாவடியை கடந்து வந்த பிறகு எந்த வாகனமும் இல்லாமலும், சாப்பிட உணவும் இல்லாமலும் நிர்க்கதியாக நின்று கொண்டிருந்த போது எர்ணாகுளத்தில் இருந்து அந்த வழியே வந்த ஒரு லாரியை இவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஆனால் அந்த லாரி டிரைவர் போலீசுக்கு பயந்து இவர்களை ஏற்ற மறுத்துள்ளார். இந்த தொழிலாளர்களோ எங்களை எப்படியாவது அழைத்து செல்லுங்கள் என கெஞ்சியிருக்கின்றனர்.
எந்த ஊருக்கு செல்கிறீர்கள் எனக் கேட்ட லாரி டிரைவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனென்றால், இவர்கள் சொன்ன ஊருக்குத் தான் அந்த லாரியும் செல்வதாக இருந்தது.
அதன்பிறகு லாரி டிரைவர் அனைவரையும் தனது லாரியில் ஏற்றிக் கொண்டார். 65 பேர் ஒரே லாரியில் இருந்ததால் வரும் வழியில் திறந்திருந்த எந்த உணவகத்திலும் இவர்கள் சாப்பிட ஓட்டல் கடைக்காரர்கள் அனுமதிக்கவில்லை.
இப்படியே பசி மயக்கத்தோடு கொளுத்தும் வெயிலில் பல ஊர்களை கடந்து அன்று மாலை 5 மணிக்கு ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே நொய்யல் சோதனை சாவடிக்கு இந்த லாரி வந்த போதுதான் சென்னிமலை போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் தாய்லாந்து நாட்டினர் தங்கியிருந்து பிரச்சனை ஏற்பட்டதால் ஈரோடு மாவட்டம் வழியாக இவர்களை அனுப்ப சென்னிமலை போலீசார் மிகவும் யோசித்தனர்.
ஆனால் இவர்கள் 65 பேரையும் முழுமையாக பரிசோதனை செய்து இவர்களுக்கு எந்த வித நோய் அறிகுறியும் இல்லை என இரு மாநில எல்லை சோதனை சாவடிகளிலும் உறுதியளிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்ததால் சென்னிமலை வழியாக ஈரோடு மாவட்டத்திற்குள் நுழைய சென்னிமலை போலீசார் அனுமதித்தனர்.
அந்த சமயத்தில் இது பற்றிய தகவல் கிடைத்ததும் செய்திக்காக நானும், தினகரன் செய்தியாளர் சிவராஜும் அங்கு சென்றோம்.
அங்கு லாரியில் இருந்தவர்களை பார்க்கும் போது உட்காருவதற்கே இடம் இல்லாமல் குழந்தைகளும், பெண்களும் பசி மயக்கத்தில் இருந்தனர்.
2 நாட்கள் சரியாக சாப்பிடாமல் இருந்ததால் அனைவரும் மிகவும் களைப்புடன் காணப்பட்டனர்.
பின்னர் நானும், சிவராஜும் பெருந்துறை வரை லாரியை அழைத்து சென்று அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் கொண்டு போய் விடுவதாக சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.செல்வராஜிடம் கூறிவிட்டு லாரிக்கு முன்பாக நாங்கள் பைக்கில் சென்றோம்.
செல்லும் வழியில் லாரியை எங்கும் நிறுத்தாமல் இருக்கும் வகையில் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.செல்வராஜ் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் உமாபதி, துரைசாமி, தலைமைக் காவலர் கலைமணி மற்றும் முருகானந்தம் ஆகியோர் பார்த்துக் கொண்டனர்.
ஆனால், லாரியில் வந்தவர்களை பசியோடு அனுப்ப எங்களுக்கு மனம் வரவில்லை.
பெருந்துறை சென்று கொண்டிருக்கும் போது நிருபர் சிவராஜின் ஆலோசனையின் படி லாரியில் வந்தவர்களுக்கு உணவளிக்க பெருந்துறை போலீசார் மற்றும் பெருந்துறை பகுதி நிருபர்களின் உதவியை நாடினோம். அவர்களும் மனமுவந்து உதவ தயார் ஆனார்கள்.
பெருந்துறையில் உள்ள நிருபர்கள் சுரேஷ் (தினமலர்) மற்றும் சக்தி ஆகியோருக்கு நண்பர் சிவராஜ் இதுபற்றி தகவல் கொடுத்தார். உடனடியாக அவர்கள் 65 பேருக்கும் உணவு தயார் செய்ய ஆரம்பித்தனர்.
லாரி பெருந்துறையை அடைந்ததும் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏவான திரு.தோப்பு வெங்கடாச்சலம் அவர்களின் உத்தரவின்படி அரசு மருத்துவர் ஒருவர் அங்கு வந்து லாரியில் வந்தவர்களுக்கு யாருக்கேனும் நோய் தொற்று ஏதாவது உள்ளதா என பரிசோதனை செய்தார். ஆனால் யாருக்கும் எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
அதன்பிறகு பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் அவர்கள் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் (போக்குவரத்து), தலைமைக் காவலர் கோபால் (தனிப்பிரிவு) மற்றும் போலீசார் முன்னின்று தங்களது சொந்த செலவில் பழம், பிஸ்கெட்டுகள் ஆகியவற்றை கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அனைவருக்கும் இவர்களே உணவும் பரிமாறினார்கள்.
சாப்பிட உணவு தயாராக இருந்த நிலையில், நாங்கள் பெருந்துறை முழுக்க தேடியும் சாப்பிடுவதற்கான தட்டு கிடைக்கவில்லை. இதையும் காவல் துறையினரே ஒவ்வொரு வீதியாக சுற்றி அலைந்து வாங்கி வந்தனர்.
பால் கடைகள் பல இருந்தாலும் குழந்தைகளுக்கு சூடான பால் கிடைக்கவில்லை. உடனடியாக தலைமைக் காவலர் கோபால் அவர்கள் தனது வீட்டுக்கு சென்று பாலை காய்ச்சி எடுத்து வந்து லாரியில் வந்த குழந்தைகளுக்கு கொடுத்தார்.
பெயர் வெளியிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் அந்த மக்களுக்காக ரூ.3 ஆயிரத்தை வழங்கினார்.
லாரியில் வந்தவர்கள் அனைவரும் பெருந்துறையை விட்டு கிளம்பும் போது மிகவும் நெகிழ்ச்சியுடன் கையெடுத்து கும்பிட்டு போலீசாருக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.
நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க லாரியில் வந்த அனைவரையும் தங்கள் குடும்பத்தினரைப் போல் நினைத்து உபசரிப்பு செய்த பெருந்துறை காவல்துறை நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
நீங்களும் வாழ்த்துங்கள்…
S.A.Nallasamy, Reporter, Chennimalai