மணப்பாறையில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கிய ஜி.ஹெச்.சி.எல் பவுண்டேஷன் மற்றும் பெட்கிராட் நிறுவனத்திற்கு மாணவர்களின் பெற்றோர்கள், கிராம பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பொடங்குப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகள் இல்லாததால் ஏழை மாணவ, மாணவிகள் கம்ப்யூட்டர் பயிற்சி பெற முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் ஜி.ஹெச்.சி.எல் பவுண்டேஷன் மற்றும் பெட்கிராட் நிறுவனம் இணைந்து ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சியை கோவில் வளாகத்தில் அளிக்க முன் வந்தனர்.
ஒரு மாதம் நடக்கவுள்ள இந்த கம்ப்யூட்டர் பயிற்சியின் தொடக்க விழாவை பொடங்குபட்டி ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா திருப்பதி தலைமையேற்று தொடங்கி வைத்து பேசுகையில்,
இந்த ஒரு மாத கம்ப்யூட்டர் பயிற்சியை மாணவ மாணவிகள் நன்றாக பயின்று கம்ப்யூட்டர் குறித்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என பேசினார்.
நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி பயிற்சியை அளிக்க வந்த நிர்வாகிகளுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக பேசினார்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை பெட்கிராட் பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார்.
பெட் கிராட் தொழில் பயிற்சி பள்ளி நிர்வாக இயக்குனர் ம.அ சுப்புராமன் துவக்க உரை நிகழ்த்தி பேசுகையில், உங்களை தேடி இந்த கம்ப்யூட்டர் பயிற்சியை வழங்க உள்ளோம். இந்த பயிற்சியை நன்றாக பயின்று சாதனையாளர்களாக நீங்கள் மாற வேண்டும் என பேசினார்.
இந்த பயிற்சியில் மொத்தம் 78 மாணவ மாணவிகள் (53 மாணவிகளும் 25 மாணவர்களும்) தனித்தனியாக இரண்டு பிரிவாக பயிற்சி பெற வந்துள்ளார்கள்.
இந்த அருமையான திட்டத்தை குறித்து ஜி.ஹெச்.சி.எல் பவுண்டேஷன் சி.எஸ்.ஆர் அலுவலர் D.சுஜின் பேசுகையில், ஜி.ஹெச்.சி.எல் பவுண்டேஷன் சார்பாக உங்களைப் போன்ற ஏழை எளிய மாணவர்கள் சாதனையாளராக உருவாக வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு மாதம் வழங்கப்பட உள்ள இந்த பயிற்சியை கவனமாக பயின்று கம்ப்யூட்டர் குறித்து நன்றாக தெரிந்து கொண்டு வாழ்வில் உயர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஊர் நாட்டாமைகள் ராதாகிருஷ்ணன், ராஜ்குமார், பழனிவேல் கவுண்டர், கருத்தகண்ணன் கவுண்டர் ஆகியோர் கலந்து கொண்டனர். பெட்கிராட் தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள்ரூபி, பயிற்சியாளர் கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சியாளர் விஜயகார்த்திகா நன்றி கூறினார்.