உலகம் 14 நாட்கள் இயங்காமல் இருந்தால் போதும்… கொரோனா வைரஸ் அழிந்துவிடும்.. பரீத் ஜக்கரியா உறுதி.
வாஷிங்கடன்: உலகம் 14 நாட்கள் இயங்காமல் இருந்தாலே போதும், கொரோனா வைரஸ் தாக்கத்தை நிச்சயம் அழித்துவிடலாம் என நம்பிக்கை தெரிவிக்கிறார் முன்னணி வெளியுறவு விவகார ஆய்வாளர் பரீத் ஜக்கரியா.
அமெரிக்காவில் வசித்து வரும் அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் 14 நாட்கள் பொதுமக்கள் வீடுகளில் முடங்குவது என்பது சாத்தியமில்லை என்றாலும், அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் 14 நாட்களுக்கு சமூக விலகலை கடைபித்து ஒவ்வொருவரும் வீடுகளில் இருந்தோமானால் கோட்பாடு அளவில் அதற்கு பிறகு கொரோனா வைரஸ் பரவுதல் என்பது சாத்தியமாகாது எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த தென்கொரியா, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா போன்ற நாடுகள் வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், கொரோனாவை அழிக்க வேண்டும், அதன் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என ஒவ்வொரு நபரும் எண்ணினால் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான யுத்தம் வெற்றி பெறும் எனக் கூறியுள்ளார் பரீத் ஜக்கரியா. மேலும், கொரோனா வைரஸ் தொற்று இருந்தால் கூட ஆரோக்கியமாக இருப்பது போன்று தான் தெரியும் என்றும், ஆனால் அதனை நோய்வாய்பட்ட ஆரோக்கியமற்றவர்களுக்கு எளிதாக உங்களால் பரப்ப முடியும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
சென்னையில், ஒரே நாளில் 2 மடங்கு கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு.. தமிழகத்திலேயே முதலிடம்
மேலும், தற்போதை சூழலில் அமெரிக்காவில் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுவதாகவும், எப்போதும் பரபரப்பாக இயங்கும் சி.என்.என். தொலைக்காட்சி அலுவலகத்தின் ஸ்டூடியோக்கள் கூட ரோபோக்கள் மூலமே இயக்கப்படுவதாகவும் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் பரீத். இந்நிலையில் அமெரிக்காவில் இரண்டரை லட்சத்திற்கும் நெருக்கமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும், இதுவரை 6,000-க்கும் மேற்பட்டோர் இந்த கொடிய நோயின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார் பரீத் ஜக்கரியா.
பரீத் ஜக்கரியாவை பொறுத்தவரை வெளியுறவுத்துறை விவகாரங்களில் பழுத்த அனுபவமும், ஆய்வறிவும் உடையவர் என்பதோடு முன்னாள் பத்திரிகையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.