சென்னை: அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.. வருகிற 15-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 தொடக்கப் பள்ளிகளில் ரூ.33.56 கோடியில் இந்த திட்டம் முதல்கட்டமாக செயல்படுத்தப்பட்டது… இதில் காலையில் உப்புமா, ரவா கிச்சடி, ரவா கேசரி, காய்கறி சாம்பார் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அரசு பள்ளிகள்: 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.33 கோடியே 56 லட்சம் செலவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்ததிட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அரசுப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் வருகை அதிகரித்ததுடன் அவர்களின் ஊட்டச்சத்தும், கற்றல் திறனும் மேம்பட்டதாக ஆய்வுகளும் கூறியிருந்தன.
இதையடுத்து, 2023-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள 30 ஆயிரத்து 992 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் 15 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடையும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
ஆயிரம் குழந்தைகள்: கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 1 முதல 5-ம் வகுப்பு வரை படிக்கும் 2 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் ரூ.600 கோடியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.
அத்துடன், இந்த திட்டத்தை தமிழக ஊரகப்பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது… சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபையிலும் பல எம்எல்ஏக்கள் இதே கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
ஊரகப்பகுதிகள்: இந்த நிலையில், தமிழக ஊரகப்பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.. மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய காமராஜர் பிறந்த நாளான வரும் 15-ம் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழச்சேரியில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் காலை 8.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்து வருகிறது.