சென்னை: படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதாகியிருக்கிறார் பெண் தாதா அஞ்சலை.. இதுகுறித்த கூடுதல் தகவல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்… ரவுடி ஆற்காடு சுரேஷ் படுகொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதாக காரணம் சொல்லப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக 11 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதில், ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கஞ்சா விற்பனை: இதில் தொடர்புடைய மேலும் பலர் அடுத்தடுத்து கைதாகி வருகிறார்கள்.. அதில் ஒருவர்தான் பாஜக நிர்வாகி புளியந்தோப்பு அஞ்சலை.. வடசென்னையில் கஞ்சா விற்பனை தாதாவாக வலம் வருபவர் இந்த அஞ்சலை. ரவுடி ஆற்காடு சுரேஷின் காதலியாகவும் இருந்தவர்.. பிறகு அவரையே கல்யாணமும் செய்து கொண்டவர்.
கடந்த 2019-ல் அஞ்சலையை சந்திப்பதற்காக ரகசியமாக வந்தபோதுதான், ஆற்காடு சுரேஷ் சுரேஷ் ஒருமுறை போலீசில் வசமாக சிக்கினார்… அஞ்சலை வீட்டுக்கு நடுராத்திரி வந்திருந்தார் ஆற்காடு சுரேஷ்..
அப்போது, போலீசார் நள்ளிரவிலேயே அஞ்சலை வீட்டை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் ஆற்காடு சுரேஷை கைது செய்திருந்தனர். அப்போதே அஞ்சலையின் பெயர் மீடியாவில் பலமாக அடிபட்டது.
இதற்கு பிறகு, திடீரென பாஜகவில் இணைந்துவிட்டார்.. கட்சியில் சேர்ந்ததுமே பாஜகவின் வடசென்னை மாவட்ட மகளிர் அணி தலைவி பதவியும் ஒதுக்கப்பட்டது.. இந்த நிகழ்வும் அப்போதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.மூத்த தலைவர் வீரமணி: அந்த சமயத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்ததை நாம் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.. அதாவது, 2021, ஜனவரி மாதம் இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார் மூத்த தலைவர் வீரமணி.
தமிழக பாஜகவில் குற்றப்பின்னணியில் உள்ளவர்கள் தொடர்ந்து இணைந்து வருவதாக கூறி, அவர்களின் பட்டியலையும் அந்த வெளியிட்டிருந்தார்.. அதில் அஞ்சலை பற்றியும் வீரமணி குறிப்பிட்டிருந்தார்.”பல கொலை வழக்குகளில் சிக்கியவர்களும், கேடிகளும் பாஜகவில் சேர்வது ஓர் ஆபத்தான போக்காகும்.. வடசென்னை கஞ்சா வியாபாரியாக வலம் வந்த புளியந்தோப்பு அஞ்சலைக்கும் பாஜக அடைக்கலம் கொடுத்தது. அவர் வடசென்னை மாவட்ட பாஜக மகளிர் அணி செயலாளராகி விட்டார். புளியந்தோப்பு அஞ்சலைமீது கொலை உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ரவுடிகள்: மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடிய பா.ஜ.க.வில் கொலைகாரர்களும், ரவுடிகளும் சேர்வது
எந்த நோக்கத்தில் என்பது எளிதாகப் புரிந்துகொள்ளத்தக்கதே.. தார்மீகம் பேசும் பாஜகவின் தரம் எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் மிகமிக முக்கியமான எடுத்துக்காட்டுகளேயாகும்.
கொலைகாரர்களையும், ரவுடிகளையும், வன்முறையாளர்களையும் கட்சியில் சேர்த்துக்கொள்ளும் கட்சியின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் நிலை என்ன? நினைக்கவே பதறும் நிலைதான்.. எல்லா வகைகளிலும் பா.ஜ.க. ஆட்சியில் நீடிப்பது நாட்டுக்கான பெருந்தீங்காகும்” என்று மூத்த தலைவர் கி.வீரமணி தெரிவித்திருந்தது பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.