சென்னை: ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்க்கொடி, இனி தன்னை திருமதி.ஆம்ஸ்ட்ராங் என அழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நிர்வாக ரீதியிலும் பெயரை மாற்றம் செய்துள்ளார்.
சென்னையை அடுத்த பெரம்பூரில், கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதற்கட்டமாக 11 பேர் கைது செய்யப்பட்டு ரவுடி திருவேங்கடம் காவல்துறை என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பிறகு அஞ்சலை, மலர்க்கொடி, ஹரிஹரன், சதீஸ் என முன்னாள் அரசியல் பிரமுகர்களும் கைது செய்யப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பிறகு, காலியாக இருந்த பகுஜன் சமாஜ்வாடி தமிழக தலைவர் பதவிக்கு, இன்று வழக்கறிஞர் ஆனந்தனை புதிய மாநில தலைவராக நியமனம் செய்து கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதே போல, மாநில ஒருங்கிணைப்பாளராக உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்க்கொடி ஆம்ஸ்ட்ராங்கை நியமித்து கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டது.
இதனை அடுத்து, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்க்கொடி, இனி தன்னை பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் என யாரும் அழைக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ‘திருமதி.ஆம்ஸ்ட்ராங்’ என அழைக்குமாறு கேட்டுள்ளார். பொற்க்கொடி எனும் பெயரை அலுவல் ரீதியாக உபயோகப்படுத்தபோவதில்லை என்று அறிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தனது கணவர் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பின்னரும் அவரது பெயர் மக்கள் மனதில் நிற்க வேண்டும் என்று இந்த முடிவை திருமதி ஆம்ஸ்ட்ராங் எடுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.