Thursday , November 21 2024
Breaking News
Home / Politics / தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிக்கை
MyHoster

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிக்கை

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் சுரேஷ்கோபி, முல்லைப் பெரியாறு அணை குறித்து மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துகிற வகையில் விஷமத்தனமான கருத்துகளை கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும் போது, ‘முல்லைப் பெரியாறு அணை தற்போது பாதுகாப்பானதாக இல்லை. எனவே, இந்த அணைக்கு பதிலாக அருகில் புதிய அணை கட்ட வேண்டும். முல்லைப் பெரியாறு அணை இடிந்தால் யார் பொறுப்பு ? நீதிமன்றம் பதில் சொல்லுமா ? அல்லது நீதிமன்றங்களில் இருந்து அத்தகைய முடிவுகளை பெறுபவர்கள் பொறுப்பேற்பார்களா ? இனியும் கேரளாவால் கண்ணீரில் மூழ்கியிருக்க முடியாது” என்ற வகையில் பேசி இடுக்கி மாவட்ட மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறார். இத்தகைய கூற்றின் மூலம் சுரேஷ் கோபி தனது அறியாமையைத் தான் வெளிப்படுத்தியிருக்கிறார். கடந்த கால முல்லைப் பெரியாறு அணை குறித்து ஏற்பட்ட பிரச்சினைகளும், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளையும் படிக்காமல் ஏனோ தானோ என்று அரைவேக்காட்டுத்தனமாக ஆதாரமற்ற இத்தகைய கருத்துகளை கூறியிருக்கிறார். இந்த கூற்றின்படி நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

முல்லைப் பெரியாறு அணையை பொறுத்தவரையில் தமிழக நீர்பாசனத்திற்கு பயன்படுகிற அணையாகும். இந்த அணை கேரள மாநிலத்தில் இருந்தாலும், அதை பராமரிக்கிற பொறுப்பு தமிழக பொதுப்பணித்துறைக்கு தான் இருக்கிறது. இதுகுறித்து பிரச்சினைகள் ஏற்பட்ட போது, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியதால் 27.2.2006 இல் அதன் தீர்ப்பின்படி அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என ஆணையிட்டது. இந்த அணையின் வலிமை குறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் ஐவர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையின்படி அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்றும், அதனால் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அறிக்கை கூறியது. இந்நிலையில் கேரள அரசு ஒரு சட்டத்தை இயற்றி தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்க முயற்சி செய்தது. ஆனால், இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் 07.05.2014 அன்று உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு கேரள அரசு இயற்றிய சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணை கட்ட முடியாது, வல்லுநர் குழு அறிக்கையின்படி நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம், புதிய அணை கட்ட வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்றும் தீர்ப்பு வழங்கியது.

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ்நாட்டின் உரிமைக்கு பாதுகாப்பாக இருக்கும் போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் தமிழ்நாட்டின் நலன்களுக்கு விரோதமாக இத்தகைய கருத்துகளை கூறுவதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி கேரள மாநிலத்திற்கு மட்டும் அமைச்சரா அல்லது இந்தியா முழுமைக்குமான அமைச்சரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியின் பேச்சு குறித்து பிரதமர் மோடி தலையிட்டு ஒன்றிய அரசின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். இந்த கருத்து ஒன்றிய அமைச்சரின் கருத்தா அல்லது பிரதமர் மோடி அரசின் கருத்தா என்பதை அறிந்து கொள்ள தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்.

ஏற்கனவே காவிரி பிரச்சினையில் அண்டை மாநிலமான கர்நாடகத்திடம் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிற நேரத்தில் இன்னொரு அண்டை மாநிலமான கேரள மாநிலத்துடன் போராடுகிற நிலைக்கு ஒன்றிய அமைச்சர் சுரேஷ்கோபி தள்ளியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. கூட்டாட்சி தத்துவத்தில் கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்களுக்கு நம்பிக்கை இருக்குமேயானால் இதுகுறித்து அவரது கருத்தை வெளியிட வேண்டும்.

எனவே, மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியின் முல்லைப் பெரியாறு அணை குறித்த கருத்தை பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

Bala Trust

About Admin

Check Also

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ பின்னணி…

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ, அறிமுகச் சுற்றில் தனது பின்னணியைப் பகிர்ந்து கொண்டார்: *வயது …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES