Friday , November 22 2024
Breaking News
Home / செய்திகள் / இந்திய பாஜக அரசே! உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு! பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு! – மே பதினேழு இயக்கம்
MyHoster

இந்திய பாஜக அரசே! உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு! பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு! – மே பதினேழு இயக்கம்

இந்திய பாஜக அரசே! உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு! பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு! – மே பதினேழு இயக்கம்

பார்ப்பனரல்லாத, பிற்படுத்தப்பட்ட-மிகவும் பிற்படுத்தப்பட்ட-பட்டியலின ஏழை-எளிய மாணவர்களின், தேசிய இன மக்களின் கல்வி உரிமையை பறிக்கும் புதிய கல்விக் கொள்கையை, கடும் எதிர்ப்புகளைத் தாண்டி கொரோனா என்ற பேரிடர் காலத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்துள்ளது மக்கள் விரோத பாஜக அரசு. இன்னும் சொல்லப்போனால், புதிய கல்விக் கொள்கையானது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைக்கு எதிராகவும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும் உள்ளது. பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கையின் பார்ப்பனத்துவ உருவமாக இந்த புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு, மக்களின்-கல்வியாளர்களின் எதிர்ப்புகளை மீறி அவசர அவசரமாக ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய ஒன்றியம் முழுமைக்கும் ஒரே பாடத்திட்டம்; 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு, கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்துவிதமான உயர்கல்விக்கும் பொது நுழைவுத்தேர்வு; மும்மொழித் திட்டத்தின் மூலம் சமஸ்கிருத-இந்தி திணிப்பு; பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி என்கிற பெயரில் குலக்கல்வி திட்டத்தை நுழைத்தல்; யூ.ஜி.சி, எம்.சி.ஐ போன்ற உயர்க் கல்வி நிறுவனங்களுக்குப் பதிலாக மையப்படுத்தப்பட்ட ஒற்றை நிறுவனத்துக்கு கீழ் அனைத்து துறைகளையும் (மருத்துவம், சட்டம் தவிர்த்து) கொண்டுவருதல்; அனைத்து கல்லூரிகளுக்கும் தன்னாட்சி வழங்குதல் என்று பட்டியல் நீள்கிறது.

இருமொழிக் கொள்கை உடைய தமிழ்நாடு தான் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் 49% உடன் முதல் இடத்தில் இருக்கிறது. இந்திய ஒன்றியத்தின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 26% தான். அதனை 50% ஆக மாற்ற வேண்டும் என்பது இந்திய அரசின் இலக்கு. அதனை தனி மாநிலமாக கிட்டத்தட்ட அடைந்து இந்தியாவிலேயே உயர்கல்வியில் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது தமிழ்நாடு. அப்படியான நோக்கம் உண்மையென்றால், இந்தியா தமிழ்நாட்டின் சமூகநீதிக்கான கல்விக்கொள்கையை தான் பின்பற்ற வேண்டும். குடிமக்கள் மீது அக்கறை இல்லாத இந்திய அரசோ தோற்றுப்போன மும்மொழிக் கொள்கையினை தமிழகம் மாதிரியான முன்னோடி மாநிலத்தின் தலையில் கட்டப்பார்க்கிறது. இந்திய அரசுக்கு குடிமக்களின் கல்வி அறிவை மேம்படுத்துவது எல்லாம் நோக்கம் கிடையாது என்பதற்கு ஒரு சிறிய சான்று தான் இந்த புள்ளிவிவரம்.

கல்வியில் ஒற்றைத்தன்மையை கொண்டுவந்து தேசிய இன மக்களின் வரலாற்றை, மொழியினை, பண்பாட்டினை இல்லாமல் செய்வது, நுழைவுத்தேர்வு மட்டுமே அடிப்படையாக வைத்து கல்வி அமைப்பை வடிவமைப்பது, மாநிலங்களின் உரிமையை மொத்தமாக பறிப்பது, உலக வர்த்தகக் கழகத்தின் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த தனியாருக்கு கல்வியினை தாரை வார்ப்பது என்பதை மட்டுமே மொத்த நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல், ஒரே வரி, ஒரே நுழைவுத்தேர்வு என்று அதிகாரத்தை மையப்படுத்தி மாநிலங்களுக்கு ஒரு மாவட்டத்திற்கு அதன் நிலத்தின் மீது இருக்கும் உரிமையை விட பலவீனமான அதிகாரத்தை வழங்கும் முனைப்பிலேயே இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்து-இந்தி-இந்து ராஷ்டிரம் என்பதை நோக்கியே ஒவ்வொரு காயையும் நகர்த்தி வருகிறது ஆளும் பாஜக அரசு.

புதிய கல்விக் கொள்கை மட்டுமல்லாது, இந்த இக்கட்டான சூழலை பயன்படுத்தி, சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களுக்கு மக்கள் கருத்தை கேட்டறியத் தேவையில்லை என்ற மசோதாவையும், தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய 12 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை தர மறுப்பதும், விவசாயதிற்கான இலவச மின்சாரத்தை தடை செய்வதும், நியாயவிலைக் கடைகளில் விலையில்லா பொருட்கள் வழங்க தடை செய்வதும் என பல்வேறு திட்டங்களை மக்கள் எதிர்ப்புகளை மீறி நிறைவேற்றி ஒன்றிய அரசு வருகிறது. கொரோனா காலத்தில் மக்கள் போராட முன்வரமாட்டார்கள், மக்கள் ஜனநாயகப்பூர்வ எதிர்ப்பை பதிவு செய்யும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க தேவையில்லை போன்ற காரணங்களினால் அவசர அவசரமாக இந்த மக்கள் விரோத திட்டங்களை, சட்டங்களை அரசு நிறைவேற்றுகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்டிவிட்டது. தொற்றைக் கட்டுப்படுத்தவும், பொருளாதார இழப்புகளைத் தடுக்கவும் எந்தவிதமான ஆக்கப்பூர்வமான திட்டங்களையும் தற்போதுவரை செயல்படுத்தாத இந்திய அரசு, மக்கள் விரோத திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மட்டும் தீவிரம் காட்டி வருகிறது. இதனை மே பதினேழு இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தித் திணிப்பை எதிர்த்து மாணவர்கள் வீதிக்கு வந்து போராடி இந்தியாவையே உற்றுப் பார்க்க வைத்த வரலாறு தமிழ்நாட்டிற்கு இருக்கிறது என்பதை பாஜக அரசு மறந்துவிடக் கூடாது!

இந்திய அரசே! மக்கள் விரோத புதிய கல்விக் கொள்கையினை உடனடியாகத் திரும்பப்பெறு. கல்வியினை மாநிலப் பட்டியலுக்கே மாற்றிடு! ஊரடங்கு காலத்தில் மக்கள் விரோத சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை நிறுத்திடு! தமிழக அரசே! இருமொழிக் கொள்கையை அரசின் கொள்கை முடிவாக இருக்கும் நிலையில்,மும்மொழிக் கொள்கை மூலம் மறைமுகமாக இந்தியை திணிக்கும் புதிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டிற்கு எதிரானது என உடனடியாக பகிரங்கமாக அறிவி! அமைச்சரவையை கூட்டி, எந்த நிலையிலும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியாது என்று தீர்மானம் நிறைவேற்று! ஒன்றிய அரசின் மக்கள் விரோத திட்டங்களை தமிழ்நாட்டில் அனுமதிக்காது உடனடியாக எதிர்ப்பினை பதிவு செய்!

மே பதினேழு இயக்கம்
9884072010

Bala Trust

About Admin

Check Also

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ பின்னணி…

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ, அறிமுகச் சுற்றில் தனது பின்னணியைப் பகிர்ந்து கொண்டார்: *வயது …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES