நம் நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டதினால் வறுமையில் இருந்து மீள்வதற்காக வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு தேடிச் செல்வோர் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர்.
இப்படி செல்வோரில் சிலர் மோசமான நபர்களிடம் சிக்கி பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவது வழக்கமாகி வருகிறது. அப்படியோரு மோசமான கும்பலிடம் சிக்கி மீண்டு வந்த இளைஞரைப் பற்றிய தகவலே இது.
சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் எனும் இளைஞர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்கள் மூலம் மலேசிய நாட்டில் வேலைக்கென சென்றார். இதற்காக ரூ.80,000 முகவர்களிடம் வழங்கியிருந்தார். அங்கு சென்றவருக்கு சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கும் ஒரு அடுக்கு மாடிக்கட்டிடத்தில் வேலை வழங்கப்பட்டது. முற்றிலுமாக அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் மாவு போன்றதொரு பொருளை வழங்கி அவை மருந்தெனக் கூறி அவற்றை ஒரு கிராம் எடை கொண்ட சிறு பொதிகளாக்கும் வேலை வழங்கப்பட்டது. சந்தேகம் கொண்ட ஆனந்த் ரகசியமான முறையில் தகவலை சிவகங்கையில் வசித்து வரும் தனது உறவினருக்கு தெரிவித்தார். அவர் இத்தகவலை சிவகங்கை மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் அவர்களிடம் நடந்தவற்றைக் கூறினார்.
நடந்தவற்றை முழுமையாகக் கேட்டறிந்த அவர் மீண்டும் பல்வேறு வழிகளில் ஆனந்தை மீட்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டார். பின்னர் தமது நிறுவனத்தின் சிங்கப்பூர் நாட்டிற்கான தலைவர் முனைவர். மணிவண்ணன் நாச்சியப்பன் அவர்களுடன் இணைந்து செயற்பட்டு மலேசியக் காவல்துறையினரைத் தொடர்பு கொண்டு ஆனந்தை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட நடவடிக்கையின் மூலம் ஆனந்த் மீட்கப்பட்டார். அங்கிருந்த 5 கிலோ மற்றும் 160 கிராம் எடையிலான ஹெரோயின் போதைப் பொருளும் 175 கிராம் மெத்தபெத்தமின் ரக போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மலேசியக் காவல்துறையினர், சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர்.நீலமேகம் நிமலன் அவர்களிடம் ஆனந்த் மீட்கப்படுவதற்கு முன்னர் வழங்கியிருந்த வாக்குறுதியை மீறி ஆனந்தை இவ்வழக்கின் சாட்சியாக உருவாக்கி வீட்டுக் காவலில் வைத்தனர்.
இரண்டு வருடங்களாக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களின் பின்னர் ஆனந்த கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு அவருடைய சொந்த ஊர் வந்து சேர்ந்தார்.
வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு தேடிச் செல்லும் போது அரசினால் அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களினூடாக செல்வது முக்கியமானதாகும்.