மதுரையில் தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பழுதான வேளாண்மை இயந்திரங்களின் சாவியை ஒப்படைக்கும் போராட்டத்தில் பணியாளர்கள் ஈடுபட்டனர்
பழுதாகி செயலற்று கிடக்கும் உழவு இயந்திரம், டிராக்டர், துணை கருவிகள், கதிர் மற்றும் கரும்பு அறுவடை இயந்திரங்கள், நடவு இயந்திரங்கள் போன்ற வாகனங்களின் சாவியை மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதுகுறித்து டாக்பியா மாவட்ட செயலாளர் ஆ.ம.ஆசிரியதேவன் கூறுகையில் :-
தமிழகத்தில் 4300க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், சுமார் 150 நகர கூட்டுறவு கடன் சங்கங்களும் அடித்தட்டு விவசாய
பெருமக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு துணை நின்று பயிர்க்கடன், கால்நடை
வளர்ப்பு, நீர்ப்பாசன வசதி, நகைக்கடன், மகளிர் சுயஉதவிக்குழு, மாற்றுத்திறனாளி
கடன்கள் வழங்குவதுடன், உரம் விநியோகம், அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்,
பொதுசேவை மையம் என பல்வேறு பணிகளுடன் அரசு அவ்வப்போது அறிவிக்கும்
எந்தவொரு திட்டத்தையும் நேரம் காலம் பாராது உழைத்து வெற்றிகரமாக செயல்படுத்தி
ஏற்கனவே இது பல்நோக்கு சேவை மையங்களாக செயல்பட்டு வருகிறது.
இச்சங்கங்கள் வெற்றிகரமாக செயல்படுத்த இயலாமல் தோல்வியுற்ற ஒரே திட்டம், கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண் சேவை மையம் என்ற திட்டமாகும். இத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் வாங்கப்பட்ட (திணிக்கப்பட்ட) உழவு இயந்திரம், டிராக்டர், துணைகருவிகள், கதிர் மற்றும் கரும்பு அறுவடை இயந்திரங்கள்,நடவு இயந்திரங்கள் பல லட்சங்களை நட்டப்படுத்தி சங்க வளாகங்களில் பயனற்று
துருப்பிடித்து பயன்படுத்த இயலா நிலையில் குவிந்து கிடக்கிறது.
இச்சங்கங்களில் சுமார் 18000 பணியாளர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில், 7000 பணியாளர்களே பணிபுரிந்து வரும் நிலையில், பல இடங்களில் ஒரே பணியாளர்
ஒன்றுக்கு மேற்பட்ட சங்கங்களில் பெரும் பணிச்சுமையுடன் பணியாற்றுவதால் கடன்
வசூல், சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் கவனம் செலுத்த இயலாமல் தொய்வு ஏற்பட்டு
மன உளைச்சலில் பணிபுரிந்து வரும் நிலை உள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே பலமுறை செயல்படுத்தி தோல்வியுற்ற இத்திட்டங்களை
பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றுதல் என்ற திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 1000
கோடி ஒதுக்கி குறீயீட்டை எய்த கூட்டுறவுத் துறையின் அனைத்து நிலை
அதிகாரிகளும் மீண்டும் லாரி, டிராக்டர், அறுவடை இயந்திரங்கள், டிரோன், என
ஒவ்வொரு சங்கங்கமும் 2 லட்சம் முதல் 1 கோடி வரை முதலீட்டில் செயல்படுத்த
கட்டாயப்படுத்துகின்றனர்.
இதுகுறித்து தெளிவான முடிவுகள் எடுக்கப்பட்டு திட்டம்
செயல்படுத்தப்பட வேண்டும்.
சங்கங்களின் எதிர்காலத்தை பற்றி கவலைகொள்ளாமல் கட்டாயப்படுத்துவதை
கைவிடக்கோரி கடந்த 25ம் தேதி மண்டல இணைப்பதிவாளர்களிடம் பெருந்திறள்
முறையீடு செய்தோம்.
அதன்பின்னரும் தீர்வு காணப்படாததால் இன்று 03.10.2023
முதல் ஏற்கனவே வாங்கப்பட்டுள்ள கருவிகளை மண்டல இணைப்பதிவாளர்
அலுவலங்களில் ஒப்படைத்துவிட்டு, இத்திட்டம் கைவிடப்படும் வரை அல்லது
ஒழுங்குப்படுத்தப்படும் வரை அனைத்துப்பணியாளர்களும் ஒட்டு மொத்த விடுப்பில்
செல்கிறோம்.
இம்மாவட்டத்தில் 170 சங்கங்களும் 500 பணியாளர்களும்
இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளோம்.
சங்கங்களைக் காக்கும் நியாயமான கோரிக்கைகளுக்கு நல்ல தீர்வு காணும்
வரை போராட்டம் தொடரும். அடுத்தகட்ட போராட்டம் குறித்து மாநில தலைமை முடிவு
செய்யும் என கூறினார்.